கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டாரங்களில் கோடை உழவு பணி தீவிரம்-இயற்கை உரத்தில் களமிறங்கிய விவசாயிகள்

கோவில்பட்டி : கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை வட்டாரங்களில் கோடை உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இப்பகுதிகளில் இயற்கை உரத்தில் விவசாயிகள் களமிறங்கி உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் பெரும்பாலும் வானம்பார்த்த பூமியாகும். ஆண்டுக்கொருமுறை பெய்யக்கூடிய பருவமழையை மட்டுமே நம்பி புரட்டாசி ராபி பருவத்தில் பயிரிடுவது வழக்கம்.

இந்நிலையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் புரட்டாசி ராபி பருவத்திற்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை கடந்த ஒரு மாத காலமாக சட்டி கலப்பை உழவு செய்து தயார்படுத்தி வருகின்றனர். அதன்பிறகு 20 நாட்கள் கழித்து பல்கலப்பை உழவு செய்யப்படும். ஒருசில கிராமங்களில் மாடுகள் மூலமும் உழவு செய்து வருகின்றனர்.

பயிர்கள் நன்கு செழிப்பாக வளர்ந்து கதிர் திரட்சியாக மணிப்பிடிக்கவும், பயிர்களுக்கு நன்மை செய்யக்கூடிய மண்புழுக்கள் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தவும், ஆட்டுக் கிடை மற்றும் மாட்டுக் கிடைபோட்டு வருகின்றனர். ஒருசில விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் கால்நடை சாணங்களை சேமித்து வைத்து அதனை நிலங்களுக்கு எடுத்து சென்று கோடை உழவில் தூவுகின்றனர்.

கால்நடைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை சமீப காலமாக ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அடி உரம் டிஏபிக்கு விதைப்பு சமயத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்படுவதால் கடந்த காலங்களில் விவசாயிகள் சிரமப்பட்டனர். எனவே டிஏபி அடி உரம் தாராளமாக கிடைக்கவும், முறைகேடுகளை தவிர்க்க டிஏபி மற்றும் யூரியா உரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முழுமையாக அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘ஆண்டுதோறும் கோடை உழவு செய்ய வேளாண்மை துறையால் ஏக்கருக்கு ரூ.500 விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வேளாண்மை துறை மூலம் கிராமங்கள் தோறும் விவசாய நிலங்களை மண்பரிசோதனை செய்ய வேண்டும்.  

மண்ணின் தன்மைக்கேற்றவாறு விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். சிறுதானியம், பயறு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறவும் விவசாயிகளை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். அச்சங்குளம் விவசாயி கருப்பசாமி கூறும்போது, ‘கோவில்பட்டி கோட்டத்தில் கோடை உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சமயத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலும் இயற்கை உரத்தையே விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இதற்கு கிராமங்களில் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். மழை வளம் பெற வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது போல், இயற்கை உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வீட்டிற்கு ஒரு கால்நடை வளர்க்கவும் விவசாயிகள் முன்வர வேண்டும். இதன் மூலம் பயிர்கள் ஊட்டச்சத்து நிறைந்து செழித்து வளரும்’ என்றார்.

Related Stories: