பள்ளி வாகனங்களை விபத்தின்றி இயக்க வேண்டும்; டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களை விபத்தின்றி இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார். ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு  நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறியதாவது: பள்ளி வாகன டிரைவர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும்.

சாலை விதிகளை கடைபிடிப்பதில் அரசு பஸ் டிரைவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டத்தில் விபத்தின்றி சாலை பயணம் மேற்கொள்வதென அனைவரும் உறுதிகொள்ள வேண்டும். வாகன பயணத்தின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது.

தமிழ்நாடு சிறப்பு விதி 2012-ன்படி வருவாய், காவல், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை கூட்டாய்வு செய்து வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளதா என உறுதி செய்ய கோரப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 727 தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் அவரச கால கதவு, வாகன இருக்கைகள், வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டியில் மருந்துகள், வாகனத்தின் படிக்கட்டு, வாகனத்தின் முன், பின் புறத்தில் பள்ளி வாகனம் என வாகன பக்கவாட்டில் பள்ளி முகவரி, தொலைபேசி எண், காவல் நிலைய தொலைபேசி எண், வட்டார போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வாகனத்தின் உட்புற பலகைகள் நல்ல நிலையில் உள்ளதா, டயர்கள், பிரேக்கள் வாகனத்தின் இதர இயந்திர பயன்பாடுகள் நல்ல நிலையில் உள்ளதா என சோதனை செய்யப்பட உள்ளது. ஆய்வின்போது குறைபாடுகள் உள்ள வாகனங்கள் கண்டறியப்பட்டால் அவ்வாகனத்தின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அதனை சரி செய்த பின் வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படும் இவ்வாறு கூறினார்.

கண் பரிசோதனை முகாம் நடந்தது. விபத்தின்றி வாகனங்களை இயக்க விழிப்புணர்வு குறும்படங்கள் பள்ளி வாகன ஓட்டுனர், நடத்துனர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. விபத்தில்லா பயணம் மேற்கொள்வதென கலெக்டர் தலைமையில் பள்ளி வாகன டிரைவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மப்ரியா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: