கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் வழக்கு: நிலை அறிக்கை சமர்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சீனா விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்ட வழக்கில் இருதரப்பும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-2014ம் ஆண்டு காலக்கட்டத்தில் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை பெற்றதாக சிபிஐ பவழக்கு பதிவு செய்தது. இதே விவகாரத்தில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்ட மனுவை முன்னதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, மேற்கண்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையும், கார்த்தி சிதம்பரமும் தனித்தனியாக  நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: