ஓவேலி வனச்சரகத்தில் மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை-மாவட்ட வன அலுவலர் தகவல்

கூடலூர் :  ஓவேலி வனச்சரகத்தில் மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:கூடலூர் வன கோட்டத்திற்குட்பட்ட ஓவேலி பகுதியானது கேரளாவின் நிலம்பூர் வடக்கு வன கோட்டம், நீலகிரி வன கோட்டம், கூடலூர் வன கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைகிறது. ஓவேலி ஒரு முக்கியமான யானைகள் வழித்தடமாகவும், தென்னிந்தியாவின் யானைகளின் வேறுபாட்டை பராமரிப்பதற்கான முக்கிய பாதையாகவும் உள்ளது. இங்கு அதிகப்படியான பலா மரங்கள், வாழைத்தோட்டங்கள், பாக்கு தோட்டங்கள் ஆகியவை உள்ளதால் யானைகள் மனித வாழ்விடத்தை நோக்கி வருகின்றன.

தற்போது, யானைகள் நிலம்பூரில் இருந்து ஓவேலி வழியாக முதுமலை நோக்கி நகர்கின்றன. ஓவேலி வரம்பில் யானைகள் துண்டு துண்டான வனப்பகுதிகள், தேயிலை, காபி, கிராம்பு, ஏலக்காய் தோட்டங்கள் மற்றும் மனித வாழ்விடங்கள் வழியாக நகர்கின்றன. ஆக்கிரமிப்புகள், ெஜன்மம் நிலங்கள் மற்றும் பிரிவு 17 நிலப்பிரச்னைகள் காரணமாக அடுத்தடுத்த காடுகள் பல திட்டுகளாக துண்டு துண்டாகி உள்ளன.

மேலும், தோட்ட தொழிலாளர்கள் வீடுகளின் அருகில் மட்டுமே உள்ளன. இவை யானை மனித குடியிருப்புகளுக்குள் நுழைவதற்கு ஒரு முக்கிய காரணமாகவும், சாதகமான சூழல்களாகவும் உள்ளன. இதனை தவிர்க்கும் பொருட்டு ஓவேலி வனச்சரகத்தில் மனித வனவிலங்குகளின் மோதல்களை குறைப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு முகாமில் இருந்து காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

முதுமலையில் இருந்து வேட்டை தடுப்பு காவலர்கள், கூடுதல் களப்பணியாளர்கள் சுமார் 50 பேர் பாதுகாப்பு பணியிலும், 3 வாகனங்களுடன் கூடிய அதிவிரைவு நடவடிககை குழு ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க ட்ரோன் அனுப்புதல், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே நிறுவுதல், காட்டு யானைகள் மனித குடியிருப்புக்குள் நுழையாத வகையில் புகை மற்றும் நெருப்பு போடப்படுகிறது.

மேலும், காட்டு யானைகளின் நடமாட்டத்தை இரவும் பகலும் தொடர்ந்து கண்காணித்தல், களக்குழுவுடன் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்குதல், வனத்துறை வாகனங்களில் போக்குவரத்தை வழங்குதல், காட்டு யானைகள் தொடர்பான எந்த ஒரு பிரச்னைக்கும் தொடர்பு கொள்ள அவசர கால தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து மைக் மற்றும் ஒலிபெருக்கி கருவிகள் மூலம் தினமும் அறிவிப்பு வழங்கியும், மனித வனவிலங்கு மோதல்களை எவ்வாறு தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துல் போன்று அனைத்து நடவடிக்கைகளும் வனத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஓவேலி வனச்சரகத்தில் மனித வனவிலங்குகளின் மோதல்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: