தண்டையார்பேட்டை அருகே கச்சா எண்ணெய் குழாயில் கசிவு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை அருகே கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டையார்பேட்டை மணிகூண்டிலிருந்து காலரா மருத்துவமனை வரை மெட்ரோ ரயில் பணிக்காக நேற்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் பணி முடிந்து அந்த பகுதியில் குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய், மின்சார கேபிள் சாலை வசதி உள்ளிட்டவை பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு குழாய்களை சரிசெய்ய தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகே பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்து தண்ணீர் தேங்கியது. அந்த இடத்தில் ஆயில் குளம்போல் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் கச்சா எண்ணெய் குழாயிலிருந்து வந்ததாக புகார் அளித்தனர். தகவலறிந்த அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்ததில் சென்னை துறைமுகத்தில் இருந்து மணலில் உள்ள சிபிசியில் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்ல கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட குழாய் தற்போது பயன்பாட்டில் இல்லை. அதிலிருந்து ஆயில் வெளியே வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து, இதனை இந்தியன் ஆயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மோட்டார் மூலம் ஆயில் கலந்த தண்ணீரை வெளியேற்றி பொதுமக்களின் அச்சத்தை போக்கினர். இதனால் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: