திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் செல்போன் டவர் அமைக்க எதிப்பு: பொதுமக்கள் விஏஓவிடம் மனு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு, தெரிவித்து விஏஓவிடம் கருமாரப்பாக்கம் மக்கள் மனு கொடுத்தனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நடுவக்கரை ஊராட்சியில், கருமாரபாக்கம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயற்சி செய்தது. அப்போது, மக்கள் வசிக்கும்  பகுதிக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க கூடாது என்று கருமாரப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள  மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அப்போதைக்கு செல்போன் டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில்,  மீண்டும் அதே பகுதியில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனிடையே, இந்த பணியை நிறுத்த வேண்டுமென்று நேற்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர்  கருமாரப்பாக்கம் விஏஓ அலுவலகம் சென்றனர். அங்கு, விஏஓ சுமதியிடம் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மக்கள் வசிக்கும் பகுதிக்கு நடுவே செல்போன் டவர் அமைப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், மூளை புற்றுநோய் மற்றும் தைராய்டு  உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது. மக்கள் எதிர்ப்பையும் மீறி, அமைக்கப்படுவது எங்களுக்கு மிகுந்த  மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  எனவே, இங்கு மக்களுக்கு எதிராக செல்போன் டவர் அமைக்ககூடாது’ என்றனர்.

Related Stories: