நிலக்கோட்டை அருகே கோயில் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

நிலக்கோட்டை:திண்டுக்கல்  மாவட்டம், நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் உள்ளது கதலி நரசிங்க  பெருமாள் கோயில். சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் சிவன்,  அம்பாளுடன், பெருமாளும் ஒரே கருவறையில் வீற்றி அருள்பாலிப்பர்.  இக்ேகாயில்  பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, நாயக்கர் காலத்தில்  விஸ்தரிப்பு செய்து  6 கால பூஜையுடன், ஆண்டுதோறும் ஐதீக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தது.  இந்து கோயில்கள் ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு  முறை கோயில்  புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த 15  ஆண்டுகளாக இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இதனால்  கோயில்  கோபுரம் முதல் சுற்றுப்புற சுவர் வரை கடுமையாக சிதிலமடைந்துள்ளது.  

பக்தர்கள்  தொடர் கோரிக்கையையடுத்து கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் முதல்  கூட்டத்தொடரிலே தமிழக அரசு 110வது விதியின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை  சார்பில் இக்கோயிலுக்கு ரூ.87 லட்சம் ஒதுக்கி புனரமைப்பு  பணிகள்  துவங்கப்பட்டன. முதற்கட்டமாக பழமை மாறாமல் இருக்க சுமார் 4 அடி ஆழம் தோண்டி மண்ணை வெளியேற்றி நவீன முறையில் மழைநீர் வடிகாலுடன் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எந்த பணிகளும் நடக்காமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே மழை காலத்திற்குள், பணிகள் அனைத்தையும்  முடித்து  கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: