தமிழகத்தின் தொழில் நிறுவனங்களுக்கு குற்றப் பின்னணி கொண்ட வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு

*சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதால் புதிய தலைவலி

*விசாரித்து பணியில் சேர்ப்பதற்கு போலீசார் அறிவுறுத்தல்

சேலம் : தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளது. அதில், குற்றப்பின்னணி கொண்ட நபர்களால், பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடப்பதோடு, அவர்கள் தப்பியோடி விடுவதால் போலீசாருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு வருகிறது. அதிக தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு பிற மாநிலத்தவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், நூல் மில்கள், தறிக்கூடங்கள், வெள்ளித்தொழில் பட்டறைகள், கோழிப்பண்ணைகள், சேகோ தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், மீன் பண்ணைகள், கட்டுமான தொழில் நிறுவனங்கள், பொம்மை தயாரிப்பு கூடங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களில் 30 முதல் 40 சதவீத அளவிற்கு வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து கூலி வேலைக்காக வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டில் தமிழகத்தில் 58.2 லட்சம் வட மாநிலத்தவர்கள் இருந்தனர். இதுவே 2011ம் ஆண்டில் 77.5 லட்சம் பேரை கடந்தது. தற்போது கோடியை தாண்டியிருக்கிறது. அதிலும், கட்டுமான தொழில், ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் வேலைபார்த்துக் கொண்டு வசிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

வேலைக்காக தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களில், குற்றப்பின்னணி கொண்ட நபர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஆங்காங்கே நடக்கும் வங்கி கொள்ளை, வீடு புகுந்து திருட்டு, நகைப்பறிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களாக கூலிவேலைக்கு வந்த வட மாநில தொழிலாளர்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் இறால் பண்ணையில் வேலைபார்த்து வந்த 2 வட மாநில தொழிலாளர்கள், ஒரு மீனவப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொன்றுவிட்டனர். அதேபோல், தனியார் நகைக்கடைகள் மற்றும் வங்கிகளில் நகை, பணம் கைவரிசையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். குற்றத்தில் ஈடுபடும் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு ஓடி விடுகின்றனர். இது போலீசாருக்கு பெரும் தலைவலியாகவும் அமைந்து விடுகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தளவில்,ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், நூல் மில்கள், தறிக்கூடங்கள், சேகோ ஆலைகள், வெள்ளிப்பட்டறைகள் போன்றவற்றில் சுமார் 60 ஆயிரம் வட மாநிலம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் இருக்கின்றனரா? என போலீசார் தொடர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். கடந்தாண்டு, சேலம் இரும்பாலை பகுதியில் வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்த வட மாநிலத்தவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.

அதேபோல், ஏற்காடு எஸ்டேட்டில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்களுக்கிடையே நிகழ்ந்த மோதலில் 2 பேர் கொலையாகினர். அதேபோல், போதை புகையிலை பொருட்களை கடத்தும் தொழிலில் அதிகளவு வட மாநிலத்தவர்கள் ஈடுபடுகின்றனர். சேலம் மாநகரில் மட்டும் 15க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள், போதை புகையிலை கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.  

சேலம் ஜலகண்டாபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தானை சேர்ந்த ஜவுளி அதிபரின் வீட்டில், கடையின் மேலாளராக வேலைபார்த்த அதே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ₹30 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினார். பிறகு அவரை ராஜஸ்தான் சென்று, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வந்தனர். அதேபோல், ஆங்காங்கே நகைப்பறிப்பு, வீடு புகுந்து திருட்டு போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வட மாநில தொழிலாளர்கள் கைதாகியுள்ளனர்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, சமீப காலமாக குற்றப்பின்னணி கொண்ட வட மாநில தொழிலாளர்களால் தமிழகத்தில் அதிகப்படியான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. இதனால், வட மாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை தமிழக காவல்துறை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான பணியில் வட மாநில தொழிலாளர்கள் எவ்வளவு பேர் ஈடுபடுகின்றனர். அவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். தொழில் நிறுவனத்தாரிடம், வட மாநிலத்தவர்களை வேலைக்கு சேர்க்கும் முன் அவர்களின் முழு விவரங்களை பெற்றிடவும், குற்றப்பின்னணியை அறிந்து பணியில் சேர்க்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக போலீசாரின் இந்த எச்சரிக்கையால், தற்போது புதிதாக வேலைக்கு வரும் வட மாநில வாலிபர்களின் விவரங்களை சேகரிப்பதோடு, அவர்களின் குற்றப்பின்னணியை அறிய காவல்துறையை நாடி வருகின்றனர். வட மாநில தொழிலாளியின் பெயர், முகவரி, ஆதார் போன்ற விவரங்களை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தால், அவர்கள் அந்த நபர் வசிக்கும் உள்ளூர் போலீசிடம் குற்றப்பின்னணி பற்றி விசாரித்து, அதன்விவரங்களை தெரிவிக்கின்றனர். இத்தகைய பாதுகாப்பு முறையை அனைத்து தொழில் நிறுவனத்தாரும் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் தான், குற்றங்களை தடுப்பதோடு,பெரிய அளவிலான இழப்பையும் தவிர்க்க இயலும் என போலீஸ் அதிகாரிகள் எடுத்துரைத்து வருகின்றனர்.

பின்னணியை அறிவது நல்லது எஸ்.பி., அறிவுறுத்தல்

சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் கூறுகையில் ‘‘வடமாநிலத்தவர்களை வேலையில் சேர்க்கும்போது அவர்களின் குற்றப்பின்னணியை அறிய அறிவுறுத்தியுள்ளோம். அதனால், வட மாநிலத்தவரை யாராவது வேலைக்கு சேர்த்தால், அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் விவரங்களை அளித்து விசாரித்துக் கொள்ள வேண்டும். இவ்விசாரணையை துரிதமாக நடத்தி குற்றப்பின்னணி விவரங்களை தெரிவிக்க போலீசார் தயாராக உள்ளனர். குற்றப்பின்னணியை அறிந்து வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதே நல்லது,’’ என்றார்.

குறைவாக கூலி கொடுத்தால் போதும்

வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிக்க முக்கிய காரணமாக குறைவான கூலி, நிறைவான வேலை என்பது இருக்கிறது. உ.பி., ராஜஸ்தான், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அங்கு சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் தொழிலாளர்கள், தமிழகத்திற்கு வந்து குறைந்த கூலிக்கு வேலை பார்க்கின்றனர். இங்குள்ள தொழிலாளருக்கு ₹500 கூலி கொடுக்க வேண்டும் என்றால், வட மாநில தொழிலாளி ₹300க்கு வேலை பார்கிறார்.

இதனால், கட்டுமான தொழில், கார் பட்டறை, வெள்ளிப்பட்டறை, தறிக்கூடங்களில் அதிகபடியான வட மாநில தொழிலாளர்களை இங்குள்ள நிறுவனத்தார் சேர்க்கின்றனர். ஆனால், சில குற்றப்பின்னணி கொண்ட தொழிலாளர்களால் பெரிய இழப்பு ஏற்படும் என்பதை அறியாமல் செய்கின்றனர். எனவே, வேலைக்கு சேரும் அனைவரது பின்னணியையும் தொழில் நிறுவனத்தார் அறிவதே சிறந்தது.

Related Stories: