மீஞ்சூர் ஒன்றியத்தில் 30 ஆண்டுகளாக 3 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்பு: அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுப்பாளையம் பஜாரில் இருந்து சிறுவாக்கம் செல்லும் சாலையில் சுமார் 20 சென்ட் அரசு நிலம் உள்ளது. இதில் கடந்த 30 ஆண்டுகளாக இரண்டு நபர்கள் கடைகள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து, 2 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், பொன்னேரி ஆர்டிஓ, பொன்னேரி தாசில்தார், நில எடுப்பு தாசில்தார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, நேற்று மேட்டுப்பாளையம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாசரம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) நர்மதா ஆகியோர் மீஞ்சூர் போலீசார் உதவியுடன் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர்.

அப்போது, ஆக்கிரமிக்கப்பாளர்களான வெள்ளைதுரை, ஜெயராமன் ஆகியோர் `எங்களுக்குத்தான் நிலம் சொந்தம்’ என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், `இது 30 ஆண்டுகளாக அரசு நிலம். மேட்டுப்பாளையத்திலிருந்து சிறுவாக்கம் செல்லும் வழி பாதை. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்தது. இதனை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்ற வேண்டும்’ என்று கூறினார்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருபவர்கள் சார்பாக, வழக்கறிஞர் `இந்த ஆக்கிரமிப்பு 10 தினங்களுக்குள் அப்புறப்படுத்தப்படும்’ என்று எழுத்து மூலமாக போலீசாருக்கு எழுதி கொடுத்தார். அதன் பின்னர் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டது. 10 தினங்களுக்குள் ஆக்கிரமிப்பை எடுக்காவிட்டால் ஆக்கிரமிப்பாளர்களை கைது செய்து ரூ3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: