கால்கள் நடுங்கும் வீடியோவால் பரபரப்பு: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல் நிலை எப்படி உள்ளது?

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து சமீபகாலமாக பல விதமான செய்திகள் வருகின்றன. குறிப்பாக உக்ரைன் போருக்கு மத்தியில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், தனது உடல்நல பிரச்னைகள் காரணமாக, ​​முன்னாள் கேஜிபி உளவாளியிடம் ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க போகிறார் என்ற தகவலும் பரவியது.

ஒரு ராணுவ கூட்டத்தின்போது புதின் மயங்கி விழும் நிலைக்கு சென்றதாக செய்திகள் பரவின. அதனால், ‘நீண்ட நேரம் பொது இடங்களில் செல்ல வேண்டாம், வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும்’ என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், புதினின் உடல்நிலை குறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், புதின் இடம்பெற்று இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கிரெம்லினில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், அதிபர் புதினின் கால்கள் நடுங்குவதும், அவர் நிற்பதற்கே சிரமப்படுவதும் பதிவாகி உள்ளது. திரைப்பட இயக்குனர் நிகிதா மகாய்லோவுக்கு விருது வழங்கி சிறப்பித்தார் புதின். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது.

விழா மேடையில் நின்று கொண்டிருக்கும்போது தான் அதிபர் விளாடிமிர் புதின் கால்கள் நடுங்குவது தெரிகிறது. உடல்நிலை சீராக இல்லை என்பதால், நீண்ட நேரம் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அவருக்கு டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் அதிகமாக வெளியாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் அதிபர் புதினின் கழிவை சேகரிக்க தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இவர், புதின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின்போது, அவரின் சிறுநீர் மற்றும் கழிவை சேகரித்து அங்கிருந்து மாஸ்கோ கொண்டு வந்து அழித்து விடுவார் என கூறப்பட்டது. அந்த கழிவுகளை கொண்டு அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரங்களை எதிரிகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: