மாங்காடு பிரதான சாலையில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

குன்றத்தூர்: குன்றத்தூரில் இருந்து குமணன் சாவடி, பூந்தமல்லி செல்வதற்கு மாங்காடு வழியாக செல்லும் சாலையே பிரதான சாலையாக உள்ளது. இப்பகுதியில், வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் இந்த சாலை வழியாக தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, கோயில் நகரமான மாங்காடு, குன்றத்தூர் ஆகிய இடங்களுக்கு வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் தங்களது வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், குன்றத்தூரில் இருந்து மாங்காடு செல்லும் பிரதான சாலையில் எப்பொழுதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில், மாங்காடு பிரதான சாலையில் தனியார் கல்லூரி அருகேயுள்ள காலி இடத்தில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு, அவைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனை, மாங்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக அப்புறப்படுத்தாததால், நாய், பன்றி போன்ற விலங்குகள் அதனை மேய்ந்து, குப்பைகள் எங்கும் சிதறி, அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி காணப்படுகிறது.

இதனால், இந்த பிரதான சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அனைவரும் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் சூழ்நிலையே நிலவி வருகிறது. மேலும், அதிகப்படியான குப்பைகளால் சூற்று சூழல் மாசுபாடு அடைவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் இடமாகவும் மாறி வருகிறது. மாங்காடு கோயில் நகரமாக திகழ்வதால், அதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வரும் வேளையில், நகராட்சி நிர்வாகமே இது போன்ற குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாங்காடு பிரதான சாலையில் மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதுடன், மீண்டும் இது போன்று பொது இடத்தில் குப்பை கொட்டாதவாறு எச்சரிக்கை விளம்பர பதாகைகள் வைத்து, மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: