காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையம்: கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், சிறு தொழில் நடத்துபவர்களுக்கான பதிவு சான்றிதழ்களை வழங்கினார்.அப்போது, மாவட்ட கலெக்டர் பேசியதாவது:தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களை சார்ந்த 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது ஊரக தொழில்களை வளர்க்கவும் மேம்படுத்தவும், நுண், குறு, சிறு தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளை உருவாக்குகிறது. இத்திட்டம், சமுதாய திறன் பள்ளிகள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகள் மூலம் திறன் வளர்ப்புக்கும் ஆதரவு தருகிறது.தொழில் முனைவோருக்கு தேவையான பல்வேறு வகையான சேவைகள் ஓரிடத்தில் தேவை என்பதன் அடிப்படையில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்களுக்கான தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல், தொழில்நுட்ப விவரங்கள், திறன் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தை பற்றிய தகவல்கள், நிதி இணைப்புகள் ஆகிய சேவைகள் மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் வழங்கப்படும். எனவே, இந்த சேவை மையத்தினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், மகளிர் திட்ட உதவி அலுவலர் அம்பிகாபதி, முன்னோடி வங்கிகளின் மேலாளர் சண்முகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: