புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டி மோதல்: நாராயணசாமியுடன் முன்னாள் அமைச்சர் காரசார வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே கோஷ்டி பூசல் காரணமாக வாக்குவாதம் நடந்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் காங்., தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. மாநில தலைவர் ஏவிசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பேசுகையில், தர்ணாவுக்கு ஏன்? குறைவான நிர்வாகிகள் வந்துள்ளார்கள். மற்ற பிரிவினரை ஏன்? அழைக்கவில்லை. போன் செய்து அனைவரையும் வரவழையுங்கள். கட்சி அலுவலகத்துக்குள் தர்ணா செய்தால் யாருக்கும் தெரியாது. வாருங்கள் வெளியே சென்று சாலை மறியல் அல்லது ரயில் மறியல் செய்வோம். கட்சியில் கருத்து வேறுபாடு இருந்தால் அனைவரும் கலந்து பேசுங்கள். எல்லோரும் சேர்ந்து கை தட்டினால்தான் சத்தம் கேட்கும். நமக்கு யாரும் எதிரி கிடையாது. ஒரே தொகுதியில் 4, 5 வேட்பாளர்கள் உருவாகிறார்கள். ஒருவருக்கு சீட் தருகிறார்கள். அதிருப்தியில் மற்றவர்கள் வேறு கட்சிக்கு சென்று நம்மை தோற்கடித்து விடுகிறார்கள். 2016 தேர்தலின் போது என்னை முதல்வர் என கூறிவிட்டு நாராயணசாமி முதல்வரானார். கட்சி தலைவர், முன்னாள் முதல்வர், எம்பிக்கு எல்லாம் வயதாகிவிட்டது. முதலில் கட்சியில் இருக்கும் வயதானவர்கள் இளைஞர்களுக்கு வழி விடுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது நாராயணசாமி குறுக்கிட்டு பேசுகையில், ஏம்பலம் பொதுக்கூட்டத்தில் பேசும்போது யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். கந்தசாமி கூட முதல்வர் ஆகலாம் என்றுதான் பேசினேன். நீங்கள்தான் (கந்தசாமி) முதல்வர் என கூறவில்லை.  கட்சி தலைமை யாரை முடிவு செய்கிறதோ, அவர்களுக்குதான் பதவி வழங்க முடியும். அவரவர் நான் தான் முதல்வர், நான்தான் முதல்வர் என்றால் நான் என்ன செய்ய முடியும் என்றார். அதற்கு கந்தசாமி, இதையே கூறி இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் என்றார்.

Related Stories: