சுகாதாரமற்ற சூழலில் காய்கறி விற்பனை

வந்தவாசி : வந்தவாசியில் சுகாதாரமற்ற பகுதியில் காய்கறி விற்பனை நடப்பதை தடுத்து மீண்டும் உழவர் சந்தையை செயல்பட வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வந்தவாசி நகராட்சி பகுதியில் காய்கறி மார்க்கெட் இல்லாத நிலையில் வியாபாரிகள் அச்சரப்பாக்கம் சாலையை காய்கறி மார்க்கெட்டாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு தாலுகா அலுவலகம் அருகில் உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் இங்கு வர விரும்பாததால் உழவர் சந்தை செயல்பாடு முடங்கி போனது.

அதேநேரத்தில் உழவர் சந்தை எதிரே 2 மொத்த வியாபாரிகள் காய்கறியை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். அதற்கேற்ப இங்கு வாகன வசதியும், இடவசதியும் உள்ளது. இந்த நிலையில் அச்சரப்பாக்கம் சாலையில் வாகனங்களை நிறுத்தி காய்கறி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நகரில் பஜார் வீதி, காந்தி சாலை, பாக்குக்கார தெரு, தேரடி என பல இடங்களில் காய்கறி கடைகள் உள்ளன.

தேரடி பகுதியில் கொண்டயாங்குப்பம், நல்லூர், ராமசமுத்திரம், தெய்யார், மடம், மாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களான வெண்டைக்காய், புடலங்காய், பூசணி, கத்திரிக்காய், மாங்காய், கீரை வகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இந்த சாலையில் காய்கறி கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளன.

அதேேபால் நகராட்சி குப்பைகளை சேகரிக்கும் பகுதியும் உள்ளது. இத்தகைய சுகாதாரமற்ற சூழலில்தான் இங்கு காய்கறி வியாபாரம் நடந்து வருகிறது. எனவே தாலுகா அலுவலகம் அருகே உழவர் சந்தையை மீண்டும் செயல்பட வைத்து அங்கு விவசாயிகளை தங்கள் விளைபொருட்களை விற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post சுகாதாரமற்ற சூழலில் காய்கறி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: