உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்

*அடுத்தடுத்து 6 வாகனங்கள் பேருந்து மீது மோதியதால் போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பெட்ரோல் பங்க் அருகில் நேற்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற டாரஸ் லாரி மீது பின்னால் திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்ததுடன், பேருந்தில் சென்ற தென்காசி கார்த்திக் (33), அனீஸ்குமார் (25), திருச்செந்தூர் சோமசுந்தரம் (48), கண்ணன் (50), கவிதா (49), திருநெல்வேலி முத்துக்குமார் (35), தூத்துக்குடி முருகன் (41), முத்துபிரியா (17), பாஸ்கர் ராஜா (39) உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எடைக்கல் காவல் நிலைய போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்துக்குள்ளான அரசு பேருந்தின் பின்பகுதியில் திருச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற மேலும் 2 அரசு பேருந்துகள் மற்றும் 4 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் யாருக்கும் காயம் இல்லை. தொடர்ந்து 8 வாகனங்கள் அடுத்தடுத்து தேசிய நெடுஞ்சாலையில் மோதி கொண்டதால் ஆசனூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்துக்கள் குறித்து எடைக்கல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: