கே.ஆர்.பி. அணையில் மீன்கள் இறந்து மிதந்த விவகாரம்: மீன்வளத்துறை ஆய்வறிக்கையால் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் , கொத்து கொத்தாக மீன்கள் இறந்து மிதந்த விவகாரத்தில் மீன்வளத்துறை ஆய்வறிக்கை தகவல் வெளியானது. அதில் நீரில் வழக்கத்தை விட நைட்ரைட், நைட்ரேட், அம்மோனியா போன்றவை அதிகமாக உள்ளதாக மீன்வளத்துறை ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் மழைநீருடன் ரசாயன கழிவுகள் கலந்ததே காரணம் என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுமார் 5 டன் மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இறந்துபோன மீன்களை மீன்வளத்துறையினர் அகற்றவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அணைக்கு ரசாயனக் கழிவு கலந்த நீர் வந்ததைத் தொடர்ந்து, அணையில் தற்போது 7 டன் மீன்கள் செத்து மிதக்கின்றன. கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலை கழிவுகள் மழை நீரோடு வந்ததே காரணம் என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் மழை பெய்த நிலையில், மழை நீருடன் கழிவு நீரும் வெளியேற்றப்பட்டு, அந்த நீர் ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன், நுரை பொங்கியபடி வந்து சேர்ந்தது. தொடர்ந்து, கெலவரப்பள்ளி அணையில் திறந்து விடப்பட்ட நீர், 11 தடுப்பணைகளைக் கடந்து 15-ம் தேதி கிருஷ்ணகிரி அணையை வந்தடைந்தது.

இந்நிலையில், ரசாயனக் கழிவு காரணமாக, தற்போது, கிருஷ்ணகிரி அணை நீரின் மேல் பகுதியில் மீன்கள் ஏராளமான எண்ணிக்கையில் செத்து மிதக்கின்றன. இதனால், மீன் பிடிப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். இதனிடையே, அணை நீரில் மிதந்த செத்த மீன்கள், அணையின் ஷட்டர் பகுதியில் ஒதுங்கி வருகின்றன. அணையின் நீர் பச்சை நிறத்தில் சேறு கலந்தது போல மாறிவிட்டது.

இது குறித்து அப்பகுதியில் மீன்பிடிப்பவர்கள் கூறியது: ‘கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவு நீர் , மழை நீருடன் வெளியேற்றப்பட்டு, அந்த நீர் கிருஷ்ணகிரி அணைக்கு வந்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணையில் இன்று காலை வரை 2 கிலோ எடை கொண்ட மீன்கள் உள்பட சுமார் 7 டன் மீன்கள் ஷட்டர் அருகே ஒதுங்கி உள்ளன.

இறந்த மீன்களை அகற்றவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணை பகுதிக்கு எவரும் செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தற்போது மீதமுள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு, சிரமம் ஏற்பட்டுள்ளது. மீன்கள் செத்து மிதப்பதால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள 500 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’, என்றனர்.

இது தொடர்பாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரத்னம் கூறுகையில், ‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். அணையில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்’, என்றார்.

இந்நிலையில் நீரில் வழக்கத்தை விட நைட்ரைட், நைட்ரேட், அம்மோனியா போன்றவை அதிகமாக உள்ளதாக மீன்வளத்துறை ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். நீரில் காரத்தன்மை 40 முதல் 400 பிபிஎம் வரை இருக்க வேண்டிய நிலையில் , தற்போது 600 மில்லி கிராம் உள்ளது. தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால், மீன்கள் உயிர் வாழ முடியாத நிலை உள்ளது என்று மீன்வளத்துறை ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

The post கே.ஆர்.பி. அணையில் மீன்கள் இறந்து மிதந்த விவகாரம்: மீன்வளத்துறை ஆய்வறிக்கையால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: