ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை அறிவிக்கப்பட்ட நான்கு வழிச்சாலை திட்டம் முடக்கம்

மண்டபம் :ராமநாதபுரம் முதல் மண்டபம் வழியாக தனுஷ்கோடி வரை சாலை பாலம் அமைக்கும் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாவாசிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவின் தென்கடைக்கோடியில் ராமநாதபுரம் மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் உச்சிப்புளி,மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் ஒரு முக்கிய நகரமாக அமைந்துள்ளது. உச்சிப்புளி பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான தளம் உள்ளது. அதுபோல உச்சிப்புளி பகுதியை சுற்றிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் தொழிலாளிகளும், முதலாளிகளும் மலேசியா, துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பகுதிகளில் பணி செய்தும், வர்த்தக நிறுவனங்கள் வைத்தும் வருகின்றனர்.

இதனால் உச்சிப்புளி பகுதி ஒரு கிராமம் சார்ந்த குட்டி சிங்கப்பூர் போல் விளங்கி வருகிறது. அதுபோல மண்டபம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய கடலோர காவல்படை தளம் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையம், ராமேஸ்வரத்தை இணைக்கு வகையில் முக்கிய ரயில் நிலையம் உள்ளது. நான்கு பகுதியிலும் கடல் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் கடைசி மணல் பரப்பு பகுதியில் மண்டபம் அமைந்துள்ளது.

மாவட்டத்தின் கிழக்கு பகுதியான உச்சிப்புளி, மண்டபம்,ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு வர்த்தக ரீதியாகவும் மற்றும் சுற்றுலாவுக்காகவும் மற்றும் சிவஸ்தலம் அமைந்த திருக்கோயிலும் இருப்பதால் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்களும், சுற்றுலாவாசிகளும் வந்து செல்கின்றனர். இதனால் ராமநாதபுரம் முதல் மண்டபம் வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த நேரத்திலும் இடைவெளி இல்லாமல் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

ஆதலால் ராமநாதபுரம் முதல் மண்டபம் வழியாக ராமேஸ்வரம்,தனுஷ்கோடி வரை 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசால் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பாம்பன் கடலில் மூன்று கிலோ மீட்டர் தொலை தூரத்திற்கு மேல் புதிய பாலம் அமைத்தும் வாகன போக்குவரத்து இயக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருந்தது. இந்த திட்டத்தில் மண்டபம் ஒன்றிய பகுதிகளில் 15 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி அமைந்துள்ள பகுதிகளில் நிலப்பரப்புகளை சாலை அமைப்பதற்கு அளவீட்டும், தனியார் நிலங்களை தேர்வு செய்தும் பணிகள் முடிக்கப்பட்டது.

அதுபோல் பாம்பன் கடலில் புதியதாக மண்டபம் காந்திநகர் பகுதி முதல் பாம்பன் தெற்குவாடி கடல் பகுதி வரை மூன்று முதல் நான்கு கிலோ மீட்டர் தொலைதூரத்திற்கு கடலில் தூண்கள் அமைத்து சாலை பாலம் அமைப்பதற்கும் கடலில் அதிநவீன டெக்னாலஜி கருவிகளுடன் பொறியியல் வல்லுனர்கள் கடலின் நீரோட்டத்தின் தன்மை, மணலின் தன்மை,கடலில் அமைந்துள்ள பாறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்த நிலையில் நான்கு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் ஒன்றிய அரசு இதுவரை பணிகளை தொடங்காமல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உச்சிப்புளி, மண்டபம், ராமேஸ்வரம் தீவுவ பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் ஒன்றிய அரசு அறிவிக்கப்பட்ட நான்கு வழிச்சாலை திட்டத்தை உடனடியாக துவங்குவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டபம் ஒன்றியம் ஊராட்சிகள் பகுதிக்கு உட்பட்ட பட்டணகாத்தான், குயவன்குடி, வாலாந்தரவை, பெருங்குளம், செம்படையார் குளம்,ஆற்றங்கரை, கீழ் நாகாச்சி, என்மனங்கொண்டான், இருமேனி, மானங்குடி, பிரப்பன்வலசை, நொச்சுயூரணி, சாத்தக்கோன்வலசை, வேதாளை, மரைக்காயர்பட்டிணம் ஆகிய 15 ஊராட்சி பகுதிகளில் இருவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நான்கு வழிச்சாலையாக மாறும் போது இந்த பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் ஒரு சில இடங்களில் ஊருக்கு மத்தியிலும் நான்கு வழிச்சாலை அமைக்க நிலங்கள் தேர்வு செந்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் வசித்து வருபவர்கள் பெரும்பான்மையானவர்கள் விவசாயிகள்.

இதனால் இந்த ஊராட்சி பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களின் வாழ்வாதாரம் உயரும். நிலங்களின் விற்பனை மதிப்பீடு கூடும். அதுபோல வர்த்தக நிறுவனங்களும் பெருகிடும். இதனால் ஊராட்சிகளில் பொருளாதாரமும் மேம்படும். ஆதலால் நான்கு வழிச்சாலை திட்டத்தை உடனடியாக துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் முதல் மண்டபம் வரை தற்போது இரு வழிச்சாலையில் அதிகமான வாகனங்கள் செல்வதாலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் விதிமுறை மீறலாலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் விபத்து நடந்து வருகிறது.

இதில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு அதிகமான உயிர் சேதங்கள் ஏற்படுகிறது. அதுபோல வளைவு சாலைகள் அதிகமாக உள்ளதால் எதிர் எதிரே வாகனங்கள் வேகமாக வரும்போது நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் ராமநாதபுரம் முதல் மண்டபம் வரை நான்கு வழிச்சாலை துவங்கப்பட்டு போக்குவரத்து நடைபெறும் பச்சத்தில் விபத்துகள் 90% குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பாம்பன் கடலில் இருந்து தனுஷ்கோடி வரை 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் மீனவர்களின் குடும்பங்கள் வசித்து வரும் பகுதியில் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பாம்பன்,தங்கச்சிமடம்,ராமேஸ்வரம் நகராட்சியில் புதுரோடு,நடராஜபுரம் ராமகிருஷணபுரம், தனுஸ்கோடி ஆகிய பகுதியை சேர்ந்த குறைந்த பட்சம் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். புதியதாக இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் மீனவப் பெண்களின் மாற்று தொழிலுக்கு இந்த சாலை முக்கிய பகுதியாக அமைந்து பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும். ஆதலால் இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை திட்டத்தை தொடங்குவது ஒரு முக்கிய அவசியமாக உள்ளது.

The post ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை அறிவிக்கப்பட்ட நான்கு வழிச்சாலை திட்டம் முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: