பெரம்பூரில் கலைஞர் பிறந்தநாள் விழா: மக்கள் மனது அறிந்து நடக்கின்ற ஆட்சியே திராவிட மாடல் ஆட்சி; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

பெரம்பூர்: மக்களின் மனது அறிந்து அதன்படி நடப்பதே திராவிட மாடல் ஆட்சி என்று அமைச்சர் வேலு பேசினார். சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்த நாள் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். சேகர் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது;

தமிழகத்தில் எத்தனையோ முதலமைச்சர்கள் ஆண்டுள்ளனர். ஒவ்வொரு முதலமைச்சருக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. ஆனால் கலைஞருக்கு பல அடையாளங்கள் உள்ளது. அவர் ஒரு சொற்பொழிவாளர், சிறந்த அரசியல்வாதி அவருக்கு நிகரான அரசியல்வாதி உலகத்திலேயே இல்லை. 50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.  13 முறை நின்று ஒருமுறை கூட தோற்கவில்லை. ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர்.

கொரோனா தொற்று உலகத்தை உலுக்கியது குடும்பத்துக்கு 5 ஆயிரம் தரவேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முடியாது என்று எடப்பாடி தெரிவித்துவிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து போட்டு 4 ஆயிரம் ரூபாய் தந்தவர் ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களாட்சி. மக்கள் மனம் அறிந்து நடக்கின்ற ஆட்சி. இந்த ஆட்சி அனைவரும் சமம் என்கின்ற ஆட்சி. அனைவரும் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்று சொல்லுகின்ற ஆட்சி. இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு தரவேண்டும் என்று சொல்லுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. நமது உரிமையை பாதுகாக்க என்றென்றும் குரல் கொடுக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளையஅருணா, கலாநிதி வீராசாமி எம்பி, ஐட்ரீம்ஸ் மூர்த்தி எம்எல்ஏ உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பொதுக்கூட்டத்தில், ஏழைகளுக்கு தையல் எந்திரம், சில்வர் குடம் உள்பட நல உதவிகளை 500 பேருக்கு அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

Related Stories: