ஏடிபி டென்னிஸ் தரவரிசை மெத்வதேவ் மீண்டும் நம்பர் 1: 3வது இடத்தில் ஜோகோவிச்

துபாய்: பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் தோற்றதால் உலகின் நம்பர் 1  டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் 3வது இடத்துக்கு பின்தங்கிய நிலையில், ரஷ்யாவின் டானில் மெத்வதேவ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஏடிபி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் 2011 ஜூலை முதல்  2022 மார்ச் வரை நம்பர் 1 வீரராக ஆதிக்கம் செலுத்தி வந்தார். கொரோனா தடுப்பூசி போடாத சர்ச்சையால் ஆஸி. ஓபன் உள்பட முன்னணி தொடர்களில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. துபாய் ஓபனிலும் காலிறுதியில் தோற்றதால், பிப்ரவரி இறுதி வாரத்தில்  2வது இடத்தில் இருந்த மெத்வதேவ்  முதல் இடத்திற்கு முன்னேறினோர். வெறும் 21 நாட்கள் மட்டுமே முதல் இடத்தில் இருந்த டானில் 2வது இடத்துக்கு தள்ளப்பட, ஜோகோவிச் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார்.

இந்நிலையில்  பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில்  நடாலிடம்  போராடி தோற்ற ஜோகோவிச், அதன் பிறகு நடந்த சில தொடர்களில் விளையாடவில்லை. அதே  சமயம், லிபெமா ஓபனில் பைனல் வரை முன்னேறிய மெத்வதேவ் 2வது இடம் பிடித்தார். அந்தப் போட்டிக்கு பிறகு வெளியான தர வரிசைப் பட்டியலில் 2000 புள்ளிகளை  இழந்த ஜோகோவிச்  2  இடங்களை இழந்து 6770 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு  தள்ளப்பட்டுள்ளார். மெத்வதேவ்  7,950 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் ((7,075)  முதல் முறையாக 2வது இடத்தை எட்டியுள்ளார். ஸ்பெயின் நட்சத்திரம் நடால் 6,525புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார்

Related Stories: