ராஜிவ்காந்தி சாலையில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற தின்பண்டங்கள் விற்பனை; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

துரைப்பாக்கம்: சென்னை அடுத்த ராஜிவ்காந்தி சாலையில் அதிக அளவில் ஐடி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், திரையரங்குகள் உள்ளன. எனவே,  இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். தினமும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் இந்த வந்து செல்கின்றனர். இந்த சாலையில் உள்ள பெரும்பாலான டீக்கடை, பழரச கடைகளில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களும் பிரியாணி, பாஸ்ட் புட் உள்ளிட்ட உணவு வகைகளும் சுகாதாரமற்ற முறையில் வெட்ட வெளியில் வைத்து விற்கப்படுகின்றன. இதனால், இதை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு வயிற்று உபாதை உள்ளிட்ட  பலவிதமான நோய்கள் வரும் அபாயம் உள்ளது.

ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறியதான் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளனர். ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு புகார் வந்தால் மற்றும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவு  பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை பறிமுதல் செய்கின்றனர். வணிக வளாகங்கள், ஓட்டல்கள், டீக்கடை நடத்த வேண்டுமென்றால் சுகாதாரத் துறையின் உரிமம் பெற்ற பின்னரே நடத்த முடியும்.

ஆனால் இங்குள்ள பல டீக்கடை, சிறிய ஓட்டல்கள், பிரியாணி மற்றும் பாஸ்ட் புட் கடைகள் சுகாதாரத்துறை உரிமம் பெறாமல் இருப்பதாகவும், அப்படி  உரிமம் பெற்ற பலர், அதை புதுப்பிக்காமல் கடை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த சாலையில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற உணவு பொருட்கள் கடைக்கு வெளியே பிளாட்பாரத்தில் வைத்து தயாரிக்கப்படுகிறது. மேலும் தின்பண்டங்கள் வெட்டவெளியில் வைத்து விற்கப்படுகிறது.  

இச்சாலையில் வாகனங்கள் செல்லும் போது, தூசிகள் அனைத்தும் இந்த உணவு பொருட்களில் விழுவதை காணமுடிகிறது. மேலும் இங்குள்ள கடைகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் அனைத்தும் சுத்தமான சமையல் எண்ணெயில் தயாரிக்கப்படுவதில்லை. இதனால், இந்த பொருட்களை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு  தீமை ஏற்படுத்தும் இதுபோன்ற சுகாதாரமற்ற கடைகளை சுகாதார ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகள் மாதம் ஒருமுறையாவது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: