காங்கிரஸ் ஆபீஸ் மீது சரமாரி குண்டு வீச்சு: கேரளாவில் பதற்றம்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக சொப்னா கூறிய புகாரை தொடர்ந்து, பினராயி விஜயன் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் காங்கிரஸ், பாஜக முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பினராயி விஜயன் எந்த இடத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அங்கு சென்று எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை பினராயி விஜயன் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்தார். விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய உடன் அதே விமானத்தில் பயணம் செய்த இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஜீத், நவீன்குமார் ஆகிய 2 பேர் திடீரென இருக்கையிலிருந்து எழுந்து பினராயி விஜயனுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பின்னர் இளைஞர் காங்கிரசார் 2 பேரும் முன்னாள் அமைச்சர் ஜெயராஜன் தங்களை தாக்கியதாக கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே விமானத்தில் வைத்து முதல்வர் பினராயி விஜயனை இளைஞர் காங்கிரசார் கொல்ல முயற்சித்ததாக கூறி சிபிஎம் தொண்டர்கள் கேரளா முழுவதும் கண்டனப் பேரணி நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் மீது கற்கள் மற்றும் கம்புகள் வீசப்பட்டன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி அலுவலகத்திற்குள் இருந்தார். பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியின் பேனர்களை கம்யூனிஸ்ட் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பேனர்களை காங்கிரஸ் கட்சியினரும் சேதப்படுத்தினர். நேற்று இரவு கண்ணூர் அருகே பையனூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வெளியே இருந்த காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே காங்கிரஸ் தொண்டர்களை விமானத்தில் வைத்து ஜெயராஜன் தாக்கியதை கண்டித்து இன்று கேரளா முழுவதும் காங்கிரஸ் கருப்பு தினமாக கடைபிடிக்கும் என்றும், இந்த சம்பவத்திற்கு ஜெயராஜனை பழிவாங்காமல் விட மாட்டோம் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன் கூறினார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் கோழிக்கோடு அருகே உள்ள பேராம்பிரா என்ற இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது மர்ம கும்பல் சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியது.

இந்த சம்பவத்தால் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அலுவலகத்தில் அந்த சமயத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது தவிர அந்த பகுதியில் உள்ள காங்கிரஸ் கொடிக்கம்பங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: