ஜவ்வாதுமலை புதூர் நாடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி-டிரைவிங் பழகியபோது பரிதாபம்

திருப்பத்தூர் : ஜவ்வாது மலை புதூர்நாடு பகுதியில் டிராக்டரை ஓட்ட பழகியபோது பள்ளத்தில் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  திருப்பத்தூர் அடுத்த அங்கநாத வலசை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(30). இவர் ஜவ்வாதுமலை புதூர் நாடு மலைப்பகுதியில் தனது டிராக்டரை எடுத்துக் கொண்டு சித்தூர் என்ற பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை உழுதுவிட்டு மீண்டும் நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, சித்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் டிராக்டர் டிரைவிங் பழக வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் கோவிந்தராஜ் அவருக்கு டிராக்டர் ஓட்ட வழங்கியுள்ளார். இந்நிலையில் சித்தூர் கூட்ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள  பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், கோவிந்தசாமி, மணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பத்தூர் கிராமிய போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் புதூர் நாடு மலைப்பகுதியில் கோவிலுக்குச் சென்ற பிக்கப் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலைப்பகுதியில் ரோந்து செல்ல கோரிக்கை

ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதிகளில் 32 கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் ஜுப், சரக்கு வாகனங்களில் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், பொதுமக்களை சவாரி ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி மலை பகுதியில் அதிக விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போலீசார் மலைக்கிராம பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: