இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்ற அமித்ஷா... எது நடந்ததோ அதுதானே வரலாறு என்று நிதிஷ் குமார் பதிலடி

டெல்லி : வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வரலாற்றை மாற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா கேட்டுக் கொண்டார். முகலாயர்கள் மீது மட்டுமே வரலாற்று ஆய்வாளர்கள் கருத்தாக இருந்தனர் என்றும் பெரும்பாலும் அவர்களை பற்றியே எழுதி உள்ளனர் என்றும் பேசினார். எத்தனையோ மன்னர்கள் இருந்தும் அவர்களைப் பற்றி எழுதவில்லை என்பதால் வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், வரலாற்றை எப்படி மாற்றி எழுத முடியும் என்று கேள்வி எழுப்பினார். எது நடந்ததோ அதுதானே வரலாறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் இந்த கருத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதேயே காட்டுவதாக கூறப்படுகிறது.  பீகாரில் மதமாற்றத் தடைச் சட்டம் தேவையில்லை என்று நிதிஷ் கூறியதும் பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீரின் சிறப்பு தகுதியை நீக்கியது, பொது சிவில் சட்டம், முத்தலாக், தேசிய குடிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: