பிர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் காலிறுதியில் சானியா இணை

பிர்மிங்காம்: விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம்  டென்னிஸ் போட்டி  இம்மாதம் 27ம் தேதி தொடங்குகிறது. புல்வெளியில் நடைபெறும் அந்தப் போட்டிக்கு முன்னோட்டமாக ஐரோப்பிய நாடுகளில் முன்னணி  வீராங்கனைகள் பங்கேற்கும் புல்வெளி டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன. இங்கிலாந்தில்  ரோத்சே கிளாசிக் பிர்மிங்காம், ஜெர்மனியில் பெட்1 ஓபன், இத்தாலியின்  வெனேடோ ஓபன் இன்டர்நேஷனல் மகளிர் டென்னிஸ்  போட்டிகள் நேற்று தொடங்கின.இங்கிலாந்தில் நடக்கும் பிர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா,  செக் குடியரசு  வீராங்கனை  லூசி  ஹரடெக்கா ஆகியோருடன்,  கிரேட் பிரிட்டன்  வீராங்னைகள்  அலிசியா  பெர்னெட், ஒலிவியா நிகோலஸ் ஆகியோர் நேற்று  மோதினர்.முதல் செட்டை  கடுமையாக போராடி 7-5 என்ற புள்ளி கணக்கில்  சானியா இணை கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த 2வது செட்டையும் சானியா இணை 6-2 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வசப்படுத்தியது. அதனால் சானியா, லூசி இணை ஒரு மணி 20 நிமிடங்களில் 2-0 என்ற நேர் செட்களில் பிரிட்டன் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அலெக்சாண்ட்ரா க்ருனிக்(செர்பியா),  கேத்ரின் மெக்நல்லி(அமெரிக்கா) ஆகியோர் நேற்று வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

Related Stories: