கர்நாடக அரசின் வஞ்சக திட்டங்களுக்கு ஒன்றிய பாஜ அரசு துணை போகக்கூடாது: துரை வைகோ வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக அரசின் வஞ்சக திட்டங்களுக்கு ஒன்றிய பாஜ அரசு துணை போகக்கூடாது என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னையில் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றை அலட்சியப்படுத்தி கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று துடிக்கிறது. கடந்த மார்ச் மாதம் கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்த 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலையில் மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

ஜூன் 17ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசின் வரைவுத் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரியின் குறுக்கே தடுப்பு அணை கட்டக் கூடாது என்று காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிலும், உச்சநீதிமன்ற உத்தரவிலும் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைத் திட்டம் பற்றி ஆராய்வது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காலில் போட்டு மிதிப்பதாகும்.கர்நாடக அரசின் வஞ்சக திட்டங்களுக்கு ஒன்றிய பாஜ அரசு துணை போக கூடாது.

Related Stories: