வன்முறை நடந்த ஹவுராவுக்கு சென்ற மே. வங்க பாஜ தலைவர் சுகந்தா மஜும்தர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நுபுர் சர்மாவிற்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை வெடித்த ஹவுரா மாவட்டத்திற்கு சென்றபோது பாஜ மாநில தலைவர் சுகந்தா மஜும்தர் கைது செய்யப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய பாஜ முன்னாள்  தகவல் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கண்டித்து, மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இந்த மாவட்டத்திற்கு மாநில பாஜ தலைவரும் உத்தர் தினத்பூரில் உள்ள பலூர்காட் எம்பியுமான சுகந்தா மஜும்தார் நேற்று சென்றார். அப்போது, வித்யாசாகர் சேடு சுங்கசாவடி அருகே அவரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘‘ஹவுராவில் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகந்தாவின் பயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும்.  எனவே, முன்னெச்சரிக்கையாக அவரை கைது செய்தோம்,” என்றார். சுகந்தா மஜும்தர் கூறுகையில், ‘‘முதலில் என்னை எனது வீட்டிலேயே தடுக்க முயன்றனர். என்னை வீட்டுக் காவலில் வைத்தனர். அதன் பின் நான்  செல்வத்றகு அனுமதித்தனர். பின்னர், என்னை வித்யாசகரில் தடுத்து நிறுத்தினர். 144 தடை உத்தரவு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று போலீசார் கூறுகின்றனர்,” என்றார். சுகந்தா கைது சம்பவத்தை அடுத்து பாஜ தொண்டர்கள் சிறிது நேரம்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜ செய்யும் பாவங்கள்

மம்தா ஆவேசம்

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நான் முன்பு கூறியது போல், கடந்த 2 நாட்களாக ஹவுராவில் நடந்த வன்முறைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் வன்முறையை தூண்ட விரும்புகின்றனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜ.வால் செய்யப்படும் பாவங்களால் சாதாரண மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: