காஷ்மீரில் இன்று அதிகாலை ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக் கொலை: 6 லஷ்கர் தீவிரவாதிகள் அதிரடி கைது

குல்காம்: கண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி ஒருவன் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம்  பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு முகாமிட்டு தீவிரவாதிகளை சுற்றிவளைத்தனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். அப்போது நடந்த பதிலடி என்கவுன்டரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல் துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘குல்காம் அடுத்த கண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

தொடர் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் உள்பட 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு சீன துப்பாக்கிகள், 18 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: