அரியலூர் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியின் உயிரை காப்பாற்றிய அமைச்சர்

அரியலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்றார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் காரில் அரியலூர்  புறப்பட்டார். வரிசைப்பட்டி அருகே வந்தபோது, அரியலூர் வட்டம் வெள்ளூர் காலனியை சேர்ந்த வெள்ளமுத்து (53), அவரது மனைவி பொன்னழகி (48) ஆகியோர் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர்.  இதை பார்த்த அமைச்சர் சிவசங்கர், தனது காரை நிறுத்திவிட்டு படுகாயமடைந்த தம்பதியினருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சில்  வந்தவர்கள், காயமடைந்தவர்களை ஏற்றி அரியலூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து நடந்த இடத்தில் குவிந்த பொதுமக்களிடம் போக்குவரத்து விதிமுறை குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கி கூறினார். விதியை முறையாக கடைபிடித்தால் இதுபோன்ற விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கூறினார். அமைச்சரின்  மனிதாபிமான செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: