தென்பெண்ணை ஆற்று நீரை நன்னீராக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

ஓசூர்: தென்பெண்ணை ஆற்று நீரை நன்னீராக மாற்றுவதற்கும், சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கவும், இன்னும் 15 நாட்களுக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆய்வு பணியில் ஈடுபட்ட அமைச்சர் மெய்யநாதன் கூறினார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாய்ந்து சென்று கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே, ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் அணை கட்டப்பட்டுள்ளது. பெங்களூரு நகரின் கழிவுகள் மட்டுமின்றி, கர்நாடகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ரசாயனம் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை கொண்டு வந்து, தென்பெண்ணை ஆற்றில் விடுவதால், கெலவரப்பள்ளி அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கரிய நிறத்தில் காணப்படுவதோடு, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நுரை பொங்கியவாறு கலங்கலாக செல்கிறது.

எனவே, கர்நாடகாவில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றப்படுவதை கட்டுப்படுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

இதையடுத்து, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி,  பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா உள்ளிட்டோர், கெலவரப்பள்ளி அணையை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மிகவும் மாசடைந்துள்ள தென்பெண்ணை ஆற்று நீரை, எதிர்காலத்தில் நன்னீராக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, சுத்திகரித்து அனுப்புவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று மேற்கொள்ளப்படும். மேலும், அணையை சுற்றிப்பார்க்க வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் முழு பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் இன்னும் 15 நாட்களில் துவங்கப்படும்,’’ என்றார்.

Related Stories: