சிவகாசியில் ரூ15 கோடி மதிப்பில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: 5 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது

சிவகாசி: சிவகாசியில் ரூ.15 கோடி மதிப்பில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைத்திட பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ‘‘நீரி’’ அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி டான்பாமா சங்க கூட்டரங்கில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. டான்பாமா சங்கத்தலைவர் சோனி கணேசன் மற்றும் சிஸ்மா, டாப்மா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக (நீரி) தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு, விஞ்ஞானி சரவணன் மற்றும் 6 ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டனர்.சிவகாசியில் பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் துவங்கிட பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு கையெழுத்திட்டார். பின்னர் இரு தரப்பிலும் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். ஆராய்ச்சி மைய புதிய கட்டிடம் கட்டுவதற்கு டான்பாமா 5 ஏக்கர் பரப்பில் வெற்றிலையூரணி கிராமத்தில் நிலம் கொடுத்துள்ளது. தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் (நீரி), மத்திய பாதுகாப்பு துறை நிதி உதவியுடன் ரூ.15 கோடி மதிப்பில் ஆராய்ச்சி மையம் அமைக்கபட உள்ளது.

இதுகுறித்து தலைமை விஞ்ஞானி சாதனாராயலு பேசியதாவது:சிவகாசியில் அமையவுள்ள ஆராய்ச்சி மைய கட்டிடத்தில் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற வேதிப்பொருட்கள், இந்தியா முழுவதிலும் உள்ள கெமிக்கல் ஆலை, பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுமதிக்கப்படும். இதேபோல் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரமும் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத தரமான வேதிப்பொருட்களை பயன்படுத்த முடியும். பட்டாசு ஆலைகளில் மாசில்லா பட்டாசுகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி மையம் உறுதுணையாக இருக்கும்.நீரி அனுமதித்துள்ள பசுமை பட்டாசால் 30 சதவீதம் புகை மாசு குறைந்துள்ளது. இதனை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. நீரியில் இதுவரை 1,000 பட்டாசு ஆலைகள் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் ரூ.10 ஆயிரம், சென்னை வெடிபொருள் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் ரூ.20,000, நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் ரூ.30,000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். பட்டாசு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பட்டாசுக்கும் ரூ.7,000 செலுத்தி நீரியின் டெஸ்டிங் தரச்சான்றிதழ் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு பேசினார்.

Related Stories: