இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு : வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள திட்டம்

சாத்தூர்: இருக்கன்குடி கோயிலில் வளர்ச்சிப்பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் குறுக்கே உள்ள ஆற்றை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் மாரியம்மன் கோவில் காணிக்கையாக வந்திருந்த தங்கம் மற்றும் பொருட்களை சேமிப்பு பெட்டகமாக மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அமைச்சர் கோவிலை சுற்றி பார்த்த பின்பு, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்பிறகு கோவில் நிதியிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு அணைக்கட்டு பகுதியிலிருந்து பேருந்து வந்து செல்ல மேம்பாலம் அமைக்கவும், கோவிலை பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்கவும், வணிக வளாகங்கள், அன்னதான கூடம் அமைக்கவும், மருத்துவ வசதிக்காக மருத்துவ மையம், சுகாதார வளாகம், ஓய்வு அறை மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்ள இடம் தேர்வு செய்வதற்காக இந்து சமய அறநிலைத் துறை தலைமை பொறியாளர் தட்சிணாமூர்த்தி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மலர்விழி, துணை பொறியாளர் அமுதா மற்றும் மற்றும் அரசு அலுவலர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் கோவில் நிர்வாக அறங்காவலர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நடைபெற உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும் அமைதியாக ஓய்வு எடுக்கவும் சிரமும் இன்றி வந்து செல்லவும் கூடிய வசதிகள் அமைத்து தரப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: