பொம்மசந்திரா -ஓசூர் மெட்ரோ பணிக்கு கர்நாடக அரசு ஒப்புதல்: கிருஷ்ணகிரி காங். எம்.பி. செல்லகுமார் கோரிக்கை ஏற்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் ஒசூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டிக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில் அதற்கான திட்ட மதிப்பீட்டை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவுறுத்தியது. பெங்களூருவில் இருந்து தமிழகத்தை ஒட்டியுள்ள பொம்மசந்திரா பகுதி வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பொம்மசந்திராவில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் மட்டுமே ஒசூர் அமைந்திருக்கும் நிலையில், இந்த மெட்ரோ ரயில் தடத்தை ஒசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் கடந்த மார்ச் மாதம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து, இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தார். பெங்களூருவில் இருந்து ஒசூருக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை மற்றும் தொழில் நிமித்தமாக பயணிப்பதை சுட்டிக்காட்டியிருந்த செல்லகுமார், மெட்ரோ திட்டத்தை ஒசூர் வரை நீடித்தால் திருநகர மக்களும் பயன்பெறுவார்கள் என்று கர்நாடக முதல்வரிடம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பொம்மசந்திராவில் இருந்து ஒசூர் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கும் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளருக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் பொம்மசந்திரா- ஒசூர் வரை மெட்ரோ ரயில் பாதைக்கான ஆய்வுப்பணிகள் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பொம்மசந்திரா- ஒசூர் இடையேயான 20.4 கி.மீ. தூரத்தில் 11.7 கி.மீ. கர்நாடக மாநிலத்தை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு 8.8 கி.மீ. தூரம் வரை மட்டுமே திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒசூரில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருப்பதால் இந்த திட்டத்தின் மூலம் இரு மாநில மக்களும் அதிகளவில் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.         

Related Stories: