கேரள அரசை கதி கலங்க வைக்கும்2 பெண்கள்: * ஆட்டம் காணும் முதல்வர் பினராய்: விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல்

‘அரசியல்’ என்றால் ஆண்கள் ஆதிக்கம்தான் என்று கூறுவார்கள். ஆனால், அரசியலில் சாணக்கியர்களாக பெண்கள் உள்ளனர். சிறிய அரசு பதவிகள் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர், கவர்னர், ஜனாதிபதி வரை அலங்கரிக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பில் அமர்ந்து ஆளுமையை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரம், சட்ட விரோத செயல்களால் சீரழியும் பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட 2 பெண்கள்தான் சரிதா, சொப்னா. விவிஐபி.க்களின் கூடா நட்பு, திடீர் வளர்ச்சி, கத்தை கத்தையாக பணம் போன்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய இந்த பெண்கள், வானளாவிய அதிகாரத்தை கொண்டு இருக்கும் அரசை ஆட்டி படைத்து வருகின்றனர். எல்லாம் ‘காசு...துட்டு...மணி...மணி...தங்கம்தான்’. ‘கடவுளின் பூமி’யான கேரளாவை ஆண்ட முதல்வர்களை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டம் காண வைக்கும் 2 பெண்கள் யார்? வாங்க பார்ப்போம்.கேரளாவில் கடந்த 9 வருடங்களுக்கு முன் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் தலைவலி ஏற்படுத்தியவர் ‘சரிதா நாயர்’. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் சரிதா நாயரை தூக்கி வைத்து கொண்டாடினர். ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதுபோல், இப்போது அதே கம்யூனிஸ்ட் கட்சிக்கு ‘சொப்னா’ என்ற பெண் மூலம் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்றது. 2013 வரை எந்த சிக்கலும் இல்லாமல் இந்த அரசு சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் சரிதா நாயர் என்ற பெண்ணின் உருவத்தில் உம்மன்சாண்டி அரசுக்கு சிக்கல் ஏற்படத் தொடங்கியது.

சோலார் பேனல் ஊழல்‘டீம் சோலார்’ என்ற பெயரில் தன்னுடைய முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து சரிதா நாயர் ஒரு சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அரசிடமிருந்து ஒப்பந்தம் பெறுவதற்காக அப்போதைய உம்மன்சாண்டி அமைச்சரவையில் இருந்த சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். நாளடைவில் அவர்களுடன் சரிதா நாயர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். முதல்வர் அலுவலகத்தில் இருந்தவர்களும் அவருடன் நெருக்கமானார்கள். இவர்கள் மூலம் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டியுடனும் சரிதா நாயர் நெருக்கத்தை ஏற்படுத்தினார். இதைப் பயன்படுத்தி சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிகளில் சம்பாதிக்க தொடங்கினார்.

சரிதா நாயர் கைது  சரிதா நாயரின் மோசடி வெளிச்சத்திற்கு வந்ததும் அப்போதைய எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் நாள் கணக்கில் நடந்த போராட்டத்தால் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது. இதையடுத்து, சரிதா நாயரின் மோசடி குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது. இதற்கிடையே, இவரது மோசடி குறித்து அடுக்கடுக்காக போலீசில் புகார்கள் குவியத் தொடங்கின. இதனால், போலீசும் சரிதா நாயர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. அதில், அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டியின் அலுவலகத்தில் இருந்த பலருக்கு சரிதா நாயருடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், உம்மன்சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

பலாத்கார புகார் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் யாரும் காப்பாற்றாததால்,  அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, சில அமைச்சர்கள் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்பட பலர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கம்யூ. படுதோல்விஉம்மன்சாண்டி முதல்வராக இருந்தபோது அவருடைய அரசு இல்லத்தில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் கூறினார். இது தொடர்பாக பின்னர் வந்த பினராய் விஜயன் அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் வீட்டில் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. சரிதா நாயர் விவகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சி மிக சரியாக பயன்படுத்தியது. இதனால்தான், கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை தழுவியது.

துபாய் சொப்னா சரிதா நாயரை கொண்டாடிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது சொப்னா என்ற பெண் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சொப்னாவுக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம் என்றாலும் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் துபாயில். இதனால், இவருக்கு நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடும். ஆங்கிலம் மட்டுமில்லாமல் இந்தி, அரபி உள்பட பல மொழிகள் இவருக்கு நன்றாகத் தெரியும். சொப்னாவின் தந்தை துபாய் மன்னர் வீட்டில் பணிபுரிந்து வந்ததால் மன்னர் குடும்பத்தினருடன் இவர் நெருக்கமானார். இந்த நெருக்கம் மூலம் கடந்த சில வருடங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகம் தொடங்கப்பட்ட போது துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக சொப்னா நியமிக்கப்பட்டார்.பல திருப்பங்கள் இந்த பதவியில் அமர்ந்த பின்னர் தான் சொப்னாவின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. துணைத் தூதருடன் நெருக்கமாக இருந்ததால் அவர் மூலம் முதல்வர் பினராய் விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா, அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

தங்க கடத்தல் தனக்கு கிடைத்த இந்த செல்வாக்கை பயன்படுத்தித் தான் சொப்னா அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கத்தை கடத்தத் தொடங்கினார். கடத்தல் குறித்து அமீரக துணை தூதருக்கும் தெரியும் என்றும், ஒவ்வொரு முறை தங்கம் கடத்தும் போதும் அவருக்கு கமிஷன் கொடுத்ததாகவும் சொப்னா ஏற்கனவே கூறி உள்ளார். இது தவிர முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவரும் பல முறை ஒன்றாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். தாங்கள் இருவரும் கணவன் மனைவி போல் நெருக்கமாக இருந்ததாகவும், சிவசங்கரை கேட்காமல் தான் எதுவும் செய்வதில்லை என்றும் சொப்னா கூறினார். சிக்கிய பினராய் விஜயன் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கடந்த 2020ம் ஆண்டு வெளியானது. ஏற்கனவே, சரிதா நாயர் விவகாரத்தால் கோமாவுக்கு சென்றிருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு சொப்னா விவகாரம் ஒரு டானிக்காக அமைந்தது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டுள்ளதால் மாநில போலீஸ் இதை விசாரிக்க முடியாது என்று கூறிய முதல்வர் பினராய் விஜயன், இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அது பின்னர் தனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அப்போது அவர் உணரவில்லை.

முதல்வர் செயலாளர் கைது கேரள அரசின் கோரிக்கையை ஏற்று சுங்க இலாகாவும், ஒன்றிய அமலாக்கத் துறையும், தேசிய புலனாய்வு அமைப்பும் நடத்திய விசாரணையில் தங்கக் கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனின் அலுவலக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. முதல்வரின் அப்போதைய முன்னாள் செயலாளரான சிவசங்கர் கைது செய்யப்பட்டது பினராய் விஜயனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் அப்போதைய சபாநாயகர் ராமகிருஷ்ணனும் சொப்னாவுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது.நெருக்கடியிலும் வெற்றி ஒரு கட்டத்தில் ஒன்றிய விசாரணை அமைப்புகள் முதல்வர் பினராய் விஜயனிடமும் விசாரணை நடத்தும் என்று கூட பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. 2020 ஜூன் மாதத்தில் தொடங்கிய இந்த பரபரப்பு அடுத்த ஆண்டு வரை நீடித்தது. 2021ல் கேரளாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் உம்மன்சாண்டி அரசைப் போல் பினராய் விஜயன் அரசும் வீழ்ந்துவிடும் என்று அனைவரும் கருதினர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் முந்தைய தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பினராய் விஜயன் முதல்வராக ஆனார். இரண்டாவது முறையாக முதல்வராகி முதலாவது ஆண்டு விழாவை கொண்டாடிய சூடு அடங்குவதற்குள் சொப்னாவால் பினராய் விஜயனுக்கு இப்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரியாணி பாத்திரத்தில் கடத்தல் எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2 நாட்கள் ரகசிய வாக்குமூலம் அளித்த சொப்னா வெளியிட்ட பல தகவல்களால் கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. துபாய்க்கு சூட்கேசில் பினராய் விஜயன் பணம் கடத்தினார் என்றும், துணைத் தூதரின் வீட்டிலிருந்து பெரிய, பெரிய பிரியாணி பாத்திரங்களில் தங்கம் கொண்டு செல்லப்பட்டது என்றும் சொப்னா கூறிய அதிரடி தகவல்களால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர். குடும்பத்தினர் உடந்தை பல மோசடிகளுக்கு பினராய் விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா உள்பட பலர் உடந்தையாக இருந்தனர் என்றும் சொப்னா கூறியதற்கு பதில் கொடுக்க முடியாமல் கம்யூனிஸ்ட் கட்சியினர் திணறி வருகின்றனர். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கூறும் இதையெல்லாம் கேரள மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறுகின்ற போதிலும், எதிர்க்கட்சிகள் அதை விடுவதாக இல்லை. சரிதா நாயர் மூலம் தங்களுக்கு கிடைத்த அடியை திருப்பிக் கொடுக்கும் வகையில் பினராய் விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் கேரளா முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

போராட்டம் தீவிரம் சொப்னா வாக்குமூலம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ‘இது பாஜ.வின் சதி வேலை’ என்று முன்னாள் அமைச்சர் ஜலீல், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறியுள்ளனர். பினராய் விஜயன் பதவி விலக விலக கோரி காங்கிரஸ், பாஜ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பு எதிர்க்கட்சியினர் பிரியாணி பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பினராய் விஜயன் பதவி விலகக் கோரி நேற்று காங்கிரஸ் சார்பில் கருப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனால், பினராய் அரசு ஆட்டம் கண்டுள்ளது. முதல் குற்றவாளியை தூக்கி சென்ற போலீஸ் தங்கக் கடத்தல் வழக்கில் அமீரக தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த சரித்குமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் தற்போது ஜாமீனில் உள்ளார். நேற்று இவர் பாலக்காட்டிலுள்ள சொப்னாவின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது, 4 பேர் சரித்குமாரை குண்டுகட்டாக காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இது குறித்து அறிந்த சொப்னா, சரித்குமாரை யாரோ மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டதாக கூறினார். அவர்கள் போலீஸ் என்று கூறினாலும் அடையாள அட்டை எதையும் காண்பிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சரித்குமாரை கடத்தியது மர்மநபர்கள் அல்ல என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்றும் தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து உடனடியாக போலீசார் அவரை விடுவித்தனர். இதன்பின் சரித்குமார் கூறுகையில், ‘யாருடைய தூண்டுதலின் பேரில் முதல்வர் பினராய் விஜயன் மற்றும் குடும்பத்தினர் மீது சொப்னா புகார் கூறினார் என்று மட்டுமே போலீசார் என்னிடம் கேட்டனர். வேறு எதையும் கேட்கவில்லை. பின்னர், அவர்கள் என்னை விடுவித்தனர்’ என்றார்.

களத்தில் குதிக்கும்அமலாக்கத் துறை சொப்னா அளித்துள்ள ரகசிய வாக்குமூலத்தை வைத்து தொடர் விசாரணை நடத்த ஒன்றிய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. தொடர் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தால் உடனடியாக அது விசாரணையை தொடங்கும். அப்போது, சொப்னா புகார் சுமத்தியுள்ள முதல்வர் பினராய் விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. அவ்வாறு விசாரணை நடத்தினால் அது முதல்வர் பினராய் விஜயனுக்கும், கேரள அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.முதல்வர்கள் நெருக்கம் கிடைத்தது எப்படி?சோலார் பேனல் ஊழல் புகாரிலும், தங்க கடத்தல் புகாரிலும் சிக்கிய சரிதா நாயாரும், சொப்னா சுரேசும் முதல்வராக இருந்த உம்மன்சாண்டி மற்றும் தற்போதைய முதல்வர் பினராய் விஜயனிடம் மிகவும் நெருக்கமான நட்பு வைத்துள்ளனர். இதுதவிர அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு சாதாரண மக்கள் மனு கொடுக்க வந்தால், மணிக்கணக்கில் காத்து இருந்தும் முதல்வரை சந்திக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர். ஆனால், இந்த 2 பெண்கள் பெரிதாக எந்த அரசியல் பலம் மற்றும் அதிகார பலம் இல்லாமல், முதல்வரை எளிதாக நெருங்கி எந்நேரத்திலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? ஒரு படி மேலே அப்போதைய முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது சரிதா நாயர் பலாத்கார புகார் அளித்தார். சொப்னாவும் தனக்கு நெருங்கி உறவு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Related Stories: