காட்டுப்பள்ளியில் 140 மீனவ குடும்பங்களின் நிலை குறித்து சென்னை ஆதரவு குழுவை சேர்ந்த உண்மை அறியும் குழுவினர் ஆய்வு

பொன்னேரி: காட்டுப்பள்ளியை சேர்ந்த 140 மீனவ குடும்பங்களின் நிலை குறித்து சென்னை ஆதரவு குழுவை சேர்ந்த உண்மை அறியும் குழுவின் பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன், கவிதா முரளிதரன், சமூக செயல்பாட்டாளர்கள் கா‌.சரவணன் மற்றும் நித்தியானந்த் ஜெயராமன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, காட்டுப்பள்ளி பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு, எல்&டி மற்றும் அதானியின் துறைமுக நிறுவனங்களின் இடையூறால் காட்டுப்பள்ளிகுப்பம் மீனவர்கள் நல்ல ஆரோக்கியம், செழிப்பு என்ற வாழ்வில் இருந்து வறுமை, பட்டினிக்கு நகர்ந்துள்ளதையும், பணி நிரந்தரம் வாக்குறுதியின் அடிப்படையில் கிராமத்தை விட்டு வெளியேறிய 140 மீனவ குடும்பங்களின் அவலநிலையை பார்வையிடவும் இக்குழுவினர் காட்டுப்பள்ளிக்கு சென்றனர். 2009ம் ஆண்டு வாக்கில் மீனவ மக்கள் வசித்த பழைய கிராமப்புற பகுதியையும் அவர்கள் செய்து வந்த மீன்பிடி தொழில் குறித்தும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்பு கிராம மக்களிடம் இதுகுறித்து அவர்கள் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர்கள் அளித்த பேட்டியில், `தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னாள் முதல்வர் கலைஞர் அளித்த பல்வேறு விதிமுறைகளை நிறைவேற்றி வருகிறது. அதில் முக்கியமானது தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உறுதிமொழி. 2009ல் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் நிலம் வழங்கிய 140 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அப்போதைய முதல்வர் கலைஞரால் வேலை வாய்ப்பு தரப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. 2009ல் இருந்து 2012 வரை கட்டுமான பணிகள் நடைபெற்றபோது தற்காலிகமாக 140 பேருக்கு கட்டுமான பணிகளில் வழங்கப்பட்டது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருவருக்கு கூட நிரந்தர வேலை வழங்கப்படவில்லை. 140 குடும்பத்தை சேர்ந்தவர்களும் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு போகாமல் போராடி வருகின்றனர். தற்போது நாங்கள் இந்த பகுதியில் ஆய்வு செய்யும்போது இதை துறைமுகத்தின் அமைக்கப்பட்ட பிறகு எந்த அளவு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கடந்த 2009ல் கலைஞர் அளித்த வாக்குறுதியை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. காட்டுப்பள்ளியைச் சேர்ந்த 140 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories: