சென்னை தூய காற்று செயல்திட்ட வரைவு அறிக்கை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  பசுமைத் தாயகம் சார்பில், ‘‘சென்னை தூய காற்று செயல்திட்ட வரைவு அறிக்கை’’யை பா.ம.க. தலைவர் அன்புமணி சென்னையில் நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பாலு, ஏ.கே.மூர்த்தி, பசுமை தாயகத்தின் செயலாளார் அருள், இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அன்புமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அறிவியல் முறையில் தூய காற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் சென்னை நகரின் காற்றையும் தூய்மையாக்க முடியும். அதே நேரத்தில் எல்லா மக்களுக்குமான வளர்ச்சியையும் சாத்தியமாக்க முடியும். சென்னை மாநகரில் வாகன புகையை தடுக்கும் விதிமுறைகளை செயலாக்க வேண்டும். வாகன பராமரிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். வாகனப் புகை விதிமீறல்களை கண்காணிக்க, தடுக்க ரிமோட் சென்சார் சோதனை முறைகளை செயல்படுத்த வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முந்தையை டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு முந்தைய பெட்ரோல் வாகனங்களையும் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும். சென்னை மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வழித்தடங்களில் அடிக்கடி பேருந்துகள் இயங்குவதை உறுதி செய்வதன் மூலம் பொதுப் போக்குவரத்து பயணத்தை பொதுமக்களிடம் ஊக்கப்படுத்த முடியும். அதேபோல் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.

பங்கிங்காம் கால்வாய், கூவம் நதியோரங்களில் மிதிவண்டிகள் நுண்பயண வசதிகள் செய்யப்பட வேண்டும். மாநகர பேருந்துகள், தனியார் மின் வாகனங்கள் பயன்படுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். பள்ளங்கள் இல்லாத தூய்மையான சாலைகளை பராமரிக்க வேண்டும். குப்பை எரிப்பை ஒழித்து குப்பை அழிப்பு மேலாண்மையை சமரசம் இல்லாமல் முறையாக கடைபிடிக்க வேண்டும். சிங்கப்பூர், நியூயார்க், லண்டன், ஹாங்காங் நகரங்களில் செயல்பட்டு வரும்  ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் போல், சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: