127வது பிறந்தநாளை முன்னிட்டு காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: காயிதே மில்லத்தின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத்தின் 127வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சென்னை வாலாஜா சாலையில் உள்ள பள்ளி வாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை போர்த்தியும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஆவடி நாசர், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய எம்பி தயாநிதி மாறன், எம்.எல்.ஏ.,க்கள் மயிலை த.வேலு, பரந்தாமன், தாயகம் கவி, பிரபாகர் ராஜா, ஆர்.டி.சேகர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லிக் தேசிய தலைவர் காதர்மொகிதீன், திமுக மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: இந்தித் திணிப்பு எதிர்ப்பு - தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி - மத நல்லிணக்கம் - சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி என தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியச் சிறுபான்மையினருக்கும் கலங்கரை விளக்கமாக திகழும் ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் பிறந்தநாளில் அவர்தம் தொண்டை நினைவுகூர்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: