திருவல்லிக்கேணியில் ரூ.2 கோடி கேட்டமைன் போதை பறிமுதல்: 9 பேர் கைது

தண்டையார்பேட்டை: திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான கேட்டமைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்து 9 பேரை கைது செய்தனர். வடசென்னை பகுதிகளில் போதைபொருட்களை அதிகளவு பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யபாரதிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவரது மேற்பார்வையில், 3 தனிப்படையினர் பாரிமுனை, மண்ணடி, ராயபுரம் மற்றும் திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று மாலை மண்ணடி பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் திருவல்லிக்கேணியில் போதைபொருட்களை பதுக்கி வைத்திருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நேற்றிரவு அப்பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் வீடுகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஒரு வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான கேட்டமைன் எனும் போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக திருவல்லிக்கேணியை சேர்ந்த ஜாகீர் உசேன் (52), முகமது சுல்தான் (59), நாசர் (55), சுனத் (42), அசாருதீன் (39 ஆகிய 5 பேரை கைது செய்து சென்னை வடக்கு கடற்கரை போலீசில் ஒப்படைத்தனர். போதைபவுடர் பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரியாஸ் உசேன் (23), திருவல்லிக்கேணியை சேர்ந்த சித்திக் முகமது (34), மண்ணடி பகுதியை சேர்ந்த யாசின் பிஸ்வாஸ் (20), ஏழுகிணறு ஹபிக் (23) ஆகிய 4 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.

பின்னர் இவர்களை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு போதை பவுடர் எங்கிருந்து வந்தது, சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார்  விசாரிக்கின்றனர்.

Related Stories: