குடியாத்தம் கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.97 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் கைது: மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்தது அம்பலம்

வேலூர்: குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார். வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், புதிய தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-19ம் ஆண்டுகளில் இந்த வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில் கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் குடியாத்தம் வங்கி கிளையில் ஆய்வு செய்தனர்.

இதில் 2018-19ம் நிதியாண்டில் மகளிர் சுய உதவிகுழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் மற்றும் போலி பயனாளர்கள் பெயரில் ரூ.97 லட்சம் கடன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அவர் மீது வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் வணிக குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: