துறைமுக நகரை தொடர்ந்து தொழில்துறை நகரம் டான்பாஸை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல்

கீவ்: துறைமுக நகரை தொடர்ந்து தொழில்துறை நகரத்தை கைப்பற்றும் முனைப்பில் கிழக்கு உக்ரைனில் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் துறைமுக நகரமும், பொருளாதார நகரமுமாக இருந்த மரியுபோலை முழுமையாக கைப்பற்றி உள்ளது. தற்போது, கிழக்கு உக்ரைன் மீது கவனம் செலுத்தி உள்ள ரஷ்யா, அங்குள்ள ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. டான்பாஸ் பிராந்தியம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனின் தலைநகரான ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க் செல்லும் சாலையில் உள்ள முக்கிய நகரமான லைமனை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளது.

துறைமுக நகரத்தை கைப்பற்றியது போல், தொழில்துறை நகரமான டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மற்றொரு மரியுபோலாக மாறும் விளிம்பில் உள்ளது. சீவிரோடோனெட்ஸ்கின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு புறநகர்ப் பகுதிகளில்  ரஷ்யப் படைகள் தங்கள் நிலைகளை வலுப்படுத்தி ஆயுதங்களை குவித்து வருகிறது. இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இங்கு அத்தியாவசிய சேவைகள் மற்றும் உதவிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதன்மூலம் டான்பாஸ் பிராந்தியம் பகுதி முழுவதையும் ரஷ்யா கைப்பற்ற முயல்கிறது.

Related Stories: