அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் தேவையில்லாத கேள்விகளை கேட்கும் சமூக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை: சேலத்தில் மாநில தகவல் ஆணையர் பேட்டி

சேலம்: அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில், தேவையில்லாத கேள்விகளை கேட்கும் சமூக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதாப்குமார் கூறினார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாநில தகவல் ஆணையத்தின் 2வது மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதாப்குமார் கலந்துகொண்டு, விசாரணை நடத்தினார். இதில், உரிய பதில் அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் அளித்த பேட்டி: மாநில தகவல் ஆணையத்திற்கு 2வது மேல்முறையீடாக வரும் மனுக்களை, அந்தந்த மாவட்டத்திற்கு சென்று விசாரணை செய்து வருகிறோம். சேலம் மாவட்டத்தில் 60 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை விசாரித்த மனுக்களில் தவறான பதிலை கொடுத்த வருவாய்த்துறையை சேர்ந்த 2 பொது தகவல் அலுவலர்களுக்கு, தலா ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தினசரி 300 முதல் 500 மனுக்கள் மாநில ஆணையத்திற்கு வருகிறது. இதில், சராசரியாக 1000 மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டால், 20 முதல் 30 சதவீத பொது அலுவலர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில், சிலர் அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு இடங்கள் எங்கெல்லாம் உள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிந்து கொள்ளவும், அதனை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். இத்தகைய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: