மத்திய பிரதேசத்தில் ‘பானி பூரி’ சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு வாந்தி : மருத்துவமனையில் சிகிச்சை

மண்டலா: மத்திய பிரதேசத்தில் ‘பானி பூரி’ சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சிங்கர்பூர் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. நேற்று மாலை அங்கிருந்த ஒரே கடையில் மக்கள் டிபன், பானிபூரி உள்ளிட்ட உணவுவகைகளை சாப்பிட்டனர். இரவு 7.30 மணியளவில், கண்காட்சிக்கு வந்த குழந்தைகளில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஷக்யா கூறுகையில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 97 குழந்தைகள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை உள்ளது. அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பானி பூரி சாப்பிட்டதால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதனால், பானி பூரியின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார். இச்சம்பவத்தையடுத்து ஒன்றிய அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே, மண்டலா எம்பி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேற்றிரவு பார்த்து ஆறுதல் கூறினர்.

Related Stories: