கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பரிதாபபலி

கூடலூர்: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலியானார். நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றியம் ஓவேலி பேரூராட்சிகுட்பட்ட பாரம் தனியார் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் மும்தாஜ் (38). இவர், நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, அவரது வீட்டுக்கு முன்பு மறைந்திருந்த காட்டு யானை மும்தாஜை கடுமையாக தாக்கியதில் அவரது தலை சிதைந்து பலியானார். அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அவரது உடலை மீட்டனர். இதையடுத்து கிராம மக்கள், அங்கு வந்த வனத்துறையினரை தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடலை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் நீண்ட நேரமாகியும் மருத்துவர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் கூடலூர்-ஊட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் எம்எல்ஏ பொன் ஜெயசீலனும் பங்கேற்றார். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் போரட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த 26ம்  தேதி ஆரூற்று பாறை பகுதியில் டீக்கடைக்காரர் ஆனந்த் காட்டு யானை தாக்கி பலியானார். தற்போது ஓவேலி பகுதியில் யானை தாக்கி மும்தாஜ் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: