சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த சுங்க வரிகள் ரத்து: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன்ஸ், சூரியகாந்தி கச்சா எண்ணெய்கள் மீதான சுங்க வரி, செஸ் வரியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிகமாகி இருப்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. ஓராண்டில் சமையல் எண்ணெய்களின் விலை 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறைகே ரூ.8, ரூ.6 என ஒன்றிய அரசு குறைத்தது.

இந்நிலையில், பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்தவும், சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன்ஸ், சூரியகாந்தி கச்சா எண்ணெய் மீதான செஸ் மற்றும் சுங்க வரியை ரத்து செய்ய ஒன்றிய அரசு பரிசீலித்து வந்தது. இதற்கான பரிந்துரையை ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு ஒன்றிய உணவு மற்றும் வர்த்தகத் துறை சமீபத்தில் அனுப்பியது. தற்போது, இந்த பொருட்களுக்கு விவசாய கட்டமைப்பு மேம்பாடு, சமூக நல மேம்பாட்டு வரியாக 5.5 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுங்கவரியும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், சோயாபீன்ஸ், சூரியகாந்தி கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரியையும், விவசாய செஸ் வரியையும்  ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்றிரவு வெளியானது. ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வரையில் செய்யப்படும் இறக்குமதிக்கு இது பொருந்தும். 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இது அமலில் இருக்கும் என்று ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கயைில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: