தர்மபுரி அருகே நாய்க்காக எழுப்பிய நடுகல் கண்டுபிடிப்பு-200 ஆண்டு பழமையானது என கணிப்பு

தர்மபுரி : அதியமான்கோட்டை அருகே குருமன் இன பழங்குடி மக்களின் கோயில் வெளியே, நாய்க்காக நடுகல் எழுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில் மாணவர்கள் சபரி, பெரியசாமி, ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதில் அதியமான்கோட்டை ஏலகிரியான் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலை அருகே, குருமன் இன பழங்குடி மக்களின் கோயிலின் வெளிபுறத்தில், நாய்க்காக தனியாக நடுகல் எழுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் எடத்தனூர் என்ற இடத்தில், ஒரு வீரனுடன் நாயும் வட்டெழுத்தும் கூடிய நிலையில் ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமே இதுவரை நடுகற்களில் நாய் இடம்பெற்றுள்ளதை வலியுறுத்தும் சான்றாக இருந்து வந்தது. தற்போது கண்டறியப்பட்டுள்ள நடுகல், சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.கர்நாடகாவில் பல்வேறு இடங்களில், எழுத்துக்களுடன் கூடிய நாய் நடுகற்கள் காணப்படுகின்றன. குருமன் இன பழங்குடி மக்கள், கர்நாடகத்திலிருந்து இங்கே புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

அதற்கு ஏற்றார்போல, இக்கோயிலின் வெளிப்புறம் நாய் உருவம் பொறித்த நடுகல் அமைந்துள்ளது. இதில் நாய் குரைத்துக் கொண்டு முன்னேறிச்செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. நாயின் காதுகள் சிறிய அளவில், மேல் நோக்கி புடைத்துக் கொண்டு, ஆக்ரோஷத்துடன் கழுத்தில் சங்கிலி கட்டப்பட்டு, உடல் முழுவதும் புள்ளிகள் கொடுக்கப்பட்டு அலங்கார வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக கோழி, நாய் போன்ற வீட்டு விலங்குகள் நடுகற்களில் இடம்பெறுவது வழக்கம் என்றாலும், தனிப்பட்ட முறையில் நாய்க்காக மட்டும் இப்பகுதியில் நடுகல் உள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

இதுகுறித்து உதவி பேராசிரியர் சந்திரசேகர் கூறுகையில், ‘ஒருகாலத்தில் வெட்டவெளியில் கற்களால் கொண்ட சுவர்களுக்கு இடையில் இருந்த இந்த நடுகற்கள், தற்போது புதுப்பிக்கப்பட்டு கோயில் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டப்படுவதால் கல்வெட்டுகளின் காலம் தொன்மையானது என்பதில் இருந்து, நவீன காலத்தை சேர்ந்தது என்ற ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. இது இவ்வின மக்களின் கலாச்சார பண்பாட்டு காலத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு காரணமாக அமைகிறது. கலாச்சார பாரம்பரிய சின்னங்களை, பழமை மாறாமல் புதுப்பித்தால் மட்டுமே, அதனுடைய தொன்மையை மீட்டெடுக்க முடியும்,’ என்றார்.

Related Stories: