கனிமவளச் சுரங்க ஒதுக்கீடு புகார் : நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன்!!

ராய்ப்பூர் : கனிமவளச் சுரங்க ஒதுக்கீடு புகார் குறித்து வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. 2021ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல்வர் ஹேமந்த் சோரன் கனிம வளங்கள் நிறைந்த ராஞ்சியின் அங்காரா பகுதியில் 0.88 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்றதாக கூறப்படுகிறது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் இந்த சுரங்கத்திற்கான சுற்றுசூழல் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் அமைப்பு சட்டம் 192வது பிரிவின் கீழ் ஜார்கண்ட் ஆளுநர் ரமேஷ் பைஸ் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனை உடனடியாக கையில் எடுத்துள்ள தேர்தல் ஆணையம் முதல்வர் சோரனுக்கு வழங்கப்பட்ட சுரங்க குத்தகை தொடர்பாக மாநில அரசின் 500 பக்க ஆவணங்களை ஆய்வு செய்வதுடன் அது பற்றி விளக்கம் அளிக்கக் கோரி சோரனுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் கனிமவள சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்து வரும் 31ம் தேதி நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சட்டப்பிரிவு 9ஏ-ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அலுவலர்கள், அரசு சார்ந்த ஒப்பந்தத்தை எடுத்தால் அல்லது அரசு சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தீவிரமான விஷயம் என்று கூறிய ஜார்கண்ட் நீதிபதிகள், முதல்வர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: