பாகிஸ்தானில் கடை வைத்திருந்த 2 சீக்கியர்கள் சுட்டுக்கொலை: பட்டப்பகலில் பயங்கரம்

பெஷாவர்: பாகிஸ்தானில் பட்டப்பகலில் சீக்கிய தொழிலதிபர்கள் இருவர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்க்வா ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்கு 15 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் சிறுபான்மை சமூகத்தினராக உள்ள  சீக்கியர்கள், இந்துக்கள், அது சார்ந்த அமைப்புகள், மத வழிபாட்டு தலங்கள்  மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த சல்ஜித் சிங் (42), ரஞ்சித் சிங் (38) ஆகியோர் பெஷாவர் அருகே சர்பாந்த் பகுதியில் உள்ள பாட்டா தால் பஜாரில் நறுமணப் பொருட்கள் கடை நடத்தி வந்தனர். நேற்று காலை பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ரஞ்சித் சிங்கும், சல்ஜித் சிங்கும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், மர்ம நபர்கள் தப்பி விட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை வலியுறுத்தி இருக்கிறது.

Related Stories: