செங்கல்பட்டு அருகே பரபரப்பு அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை போளூர் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. அதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பயணம் செய்தனர். வந்தவாசியை சேர்ந்த டிரைவர் முருகன் (45) பஸ்சை ஓட்டிசென்றார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செங்கல்பட்டு பகுதியில் பச்சையம்மன் கோயில் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது பச்சையம்மன் கோயில் உட்பகுதியில் இருந்து திடீரென ஒரு டிராக்டர், தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. அந்த நேரத்தில், திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், டிராக்டர் மீது மோதாமல் இருக்க, பிரேக் பிடித்து நின்றது. அப்போது, அந்த பஸ்சின் பின்னால் வந்த போளூர் அரசு பஸ்சின் டிரைவர், முன்னால் நின்ற பஸ் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார். ஆனால், பிரேக்  பிடிக்காமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் சக்கரம் முறிந்து தாறுமாறாக ஓடியது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே டிரைவர், சாலையோரம் இருந்த கட்டையில் மோதி, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் உயிர் சேதம்  தவிர்க்கப்பட்டது. இதில், டீசல் டேங்க் உடைந்து, டீசல் வெளியேறியது.   

இதையடுத்து, விபத்துக்குள்ளான பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும், மாற்று பஸ் மூலம் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து  செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு சென்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் பீய்ச்சி அடித்து தீப்பற்றாமல் நடவடிக்கை எடுத்தனர். கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாதுரியமாக செயல்பட்டு பஸ்சை இயக்கிய டிரைவர் முருகனை,  பயணிகள் பாராட்டினர். புகாரின்படி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: