வாழப்பாடி அருகே காளியம்மன் கோயிலில் 100 பெண்களுக்கு பேய் ஓட்டும் வினோத வழிபாடு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள தேக்கல்பட்டி ஊராட்சி மேற்குகாடு பகுதியில் மலைவாழ் மக்கள் வழிபடக் கூடிய மத்தாள காளியம்மன் கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயில் மலைப்பகுதி சூழ்ந்த, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் பெண்களுக்கு பேய் ஓட்டும் வினோத நிகழ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று பேய் ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.

கெங்கவல்லி, அயோத்தியாபட்டணம், பச்சைமலை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய முறையில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமணமாகாத பெண்கள் வெள்ளை சேலை கட்டியும், திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும் தரையில் கவிழ்ந்து படுத்திருந்தனர். சேர்வை மாடு என்று அழைக்கப்படும் கூடிய காளை மாடுடன் கோயிலை பூசாரி வலம் வந்து, தரையில் படுத்திருந்த பெண்களை மாடு தாண்டி சென்றது.

அப்போது பெண்களுக்கு பேய் இருந்தால் மாடு அந்த பெண்களை மிதித்து தாண்டுவதாகவும், பேய் இல்லை என்றால் மாடு அந்த பெண்களை தாண்டி விடுவதாகவும் கூறப்படுகிறது. காளை மாடு மிதிக்கும் பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்று அங்குள்ள மரத்தடியில் வைத்து சாட்டையால் அடித்து பூசாரிகள் பேய் ஓட்டினர். மேலும் அப்பெண்களின் தலைமுடியை பிடுங்கி ஆணியால் மரத்தில் அடித்தனர். இவ்வாறு 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பேய் ஓட்டப்பட்டது. இந்த நிகழ்வு பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Related Stories: