கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பிதிர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பந்தலூர் அருகே கொலப்பள்ளி, குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் சேர்ந்து 6 யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. உணவு தேடி சென்றபோது அப்பகுதி விவசாயி சண்முகநாதனின் தேயிலை தோட்டத்தில் இருந்த சுமார் 30 அடி ஆழ குடிநீர் கிணற்றில் 2 வயது மதிக்கத்தக்க குட்டி யானை தவறி விழுந்தது.

தகவலறிந்து பிதர்காடு வனத்துறையினர், யானையை மீட்க பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றின் அருகே பள்ளம் தோண்டினர். அப்போது தாய் யானை ஆக்ரோஷத்துடன் பொக்லைன் இயந்திரத்தை முட்டி தள்ளியது. அருகில் இருந்த வீடுகளின் கூரைகளையும், ஜன்னல் கதவுகளையும் உடைத்து சேதப்படுத்தியது. நீண்ட நேரத்திற்கு பின் தாய் யானையை வனத்துறையினர் விரட்டினர்.

அதன்பின், 2 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி கிணற்றின் அருகே சாய்வாக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் கிணற்றில் இறங்கி யானை குட்டியின் முன்பக்க கால் ஒன்றில் கயிற்றை கட்டி இழுக்க முயற்சித்தனர். ஆனால் வெளியே வர இயலாமல் குடடி யானை தடுமாறியது. சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கிணற்றில் இருந்து வெளியே வந்தது. அப்போது கோபத்தில் இருந்த குட்டி யானை, பொக்லைன் இயந்திரத்தை முட்டி தள்ளியதோடு வனத்துறையினரையும் விரட்டியது. பின்னர் வனத்துறையினர் சத்தமிட்டு விரட்டவே, குட்டி யானை தாய் யானையுடன் சேர்ந்தது.

 

The post கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: