தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளால் கெலவரப்பள்ளி அணையில் நுங்கும், நுரையுமாக வரும் தண்ணீர்

ஓசூர் : பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், தென்பெண்ணை ஆற்றில் வருவதால், கெலவரப்பள்ளி அணையில் உள்ள தண்ணீர் நுங்கும், நுரையுமாக மாசடைந்து காணப்படுகிறது.தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நீர் தமிழகத்தின் கொடியாளம் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு வந்தடைகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 480 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 593 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 480 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையில், தற்போது 40.18 அடிக்கு தண்ணீர் உள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 505 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 279 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 47.14 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் காவிரி  ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவுகளை, ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நுங்கும், நுரையுமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதிலும் குவியல் குவியலாக நுரை பொங்கி தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் பார்வையிட்டு, கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: